ஈஷா அறக்கட்டளை அனைத்து அனுமதிகளையும் பெற்றே தகன மேடையை கட்டியுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். Isha cremation ground
கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
ஆனால் உரிய அனுமதி பெறாமல் இந்த தகனமேடை கட்டப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் தாக்கல் செய்த மனுவில், மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் ஆட்சேபத்தை கேட்காமல் தகனமேடைய அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மே 6) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
“தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ‘நிறுவுவதற்கான ஒப்புதல்’ (CTE) உட்பட அனைத்து அனுமதிகளை பெற்றும், தேவையான விதிமுறைகளையும் பின்பற்றியே ஈஷா அறக்கட்டளை எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது. மேலும், தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த மனுதாரர் தகன மேடைக்கு அருகிலுள்ள நில உரிமையாளராக இருந்தாலும், அவரின் வீட்டுக்குத் தேவையான கட்டுமான அனுமதியை பெறவில்லை, அதற்கான வீட்டு வரியையும் செலுத்தவில்லை” என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஈஷா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 15 மயானங்களை ஈஷா பராமரித்து செயல்படுத்தி வருகிறது. இந்தச் செயல்களை முடக்க முயலும் சில குழுக்கள் தவறான நோக்கங்களோடு செயல்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Isha cremation ground
