ராதாகிருஷ்ணனின் கதை
ரசாயன விவசாய பூச்சிக்கொல்லிகளால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன், அந்த பாதிப்புதான் என்னை இயற்கை விவசாயத்திற்கு தள்ளியது. 1987 வருஷம் எனக்கு 30 வயதிருக்கும் காலில் காயம் பட்டிருந்தது சிறிய காயம் என்பதால் பொருட்படுத்தாமல் வயலுக்கு பூச்சிமருந்து (பூச்சிக்கொல்லி) அடித்துக் கொண்டிருந்தேன்.
பயிரின் நடுவே சென்று பூச்சி மருந்தை தெளித்துக் கொண்டிருந்ததால் கால்கள் பயிரின் மேல் உரசி, காயத்தின் வழியாக புகுந்து பூச்சிக் கொல்லி விஷம் உடலில் பரவிவிட்டது, சிறிது நேரத்திலேயே எதுவும் செய்ய முடியாமல் விழுந்து விட்டேன், பேச முடியவில்லை ஆனால் நினைவு இருந்தது. அருகில் உள்ளவர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் என்னை பரிசோதித்துப் பார்த்து என்ன பூச்சி மருந்து என்று தெரிந்தால்தான் மருத்துவம் செய்ய முடியும் என்று கூறிவிட்டார்கள்.
எனக்கு லேசாக நினைவிருந்ததால் சற்று சிரமப்பட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளின் பெயரை எழுதிக்காண்பித்தேன், மருத்துவர் உடனடியாக மாற்று மருந்து கொடுத்ததினால் உயிர் பிழைத்துக் கொண்டேன், அன்றிலிருந்து இன்று வரை வயலுக்கு பூச்சி மருந்தைத் தெளித்ததில்லை என்கிறார் விவசாயி ராமகிருஷ்ணன்.
விழுப்புரம் மாவட்டம் கண்டேன்மானடி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், தற்போது இயற்கை விவசாயம் செய்கிறார். பாரம்பரிய அரிசி வகைகளையும், சிறுதானியங்களையும் உற்பத்தி செய்து விதைக்காக வழங்கி வரும் அவரது அனுபவங்கள் அவரது வார்த்தைகளில்…

1989 முதல் 2002 வரையில் அடியுரமாக யூரியா போன்ற உரங்களை பயன்படுத்தினாலும், பூச்சி மருந்தை தெளித்ததில்லை. பயிர்களுக்கு பூச்சிகளால் சிறுசிறு பாதிப்பு வந்தாலும், மகசூல் இழப்பு ஏற்படுமளவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, 2002ம் ஆண்டில் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
“அட துஷ்டன கண்டா தூர விலகுன்னு நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லீங்கோ?! அதுமாதிரி பூச்சிக்கொல்லிய தூர வச்சுப்போட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன்.
ஆரம்பத்துல இயற்கை விவசாயம் செய்யற ஆர்வம் மட்டும்தான் இருந்தது, ஆனால் தற்போது இருப்பது போல் இயற்கை விவசாயம் குறித்து தெளிவான பயிற்சிகளோ, தகவல் தொடர்புகளோ அப்போது இல்லை, அதனால் எனக்கு தெரிந்த அளவு மட்டுமே இயற்கை விவசாயம் செய்தேன்.
இயற்கை விவசாயப் பயிற்சிகள் எனக்கு 2002ம் ஆண்டில்தான் கிடைத்தது, டாக்டர் விஜயலட்சுமி என்பவர் சென்னை அருகே படாளத்தில் இயற்கை விவசாயப் பயிற்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன், ஒரு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக் கொண்டேன், அந்தப் பயிற்சி எனது விவசாய முறையை மாற்றியமைத்தது.
இயற்கை விவசாயம் தொடங்கிய புதுசுல எனக்கு தோல்விதான் கிடைத்தது. நான் இயற்கை விவசாயத்தை செயல்முறையாக புரிந்துகொள்ள இரண்டு வருஷம் ஆனது. ஆரம்பத்தில் அமிர்தக் கரைசலைத் தயாரித்து எப்படி விடுவது என்பதுகூட சரியாகத் தெரியவில்லை, என் விருப்பம் போல் விடுவேன்.
எனினும் படிப்படியாக நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன், அருகில் உள்ள விவசாயிகள் ரசாயன உரம் போட்டு 30 மூட்டை எடுத்தாலும், நான் உரச்செலவுகள் இல்லாமலே 25 மூட்டை அறுவடை எடுத்துவிடுவேன். படிப்படியாக நம்மாழ்வார் ஐயா, பாலேக்கர் ஐயா போன்ற பெரியோர்களின் தொடர்புகள் கிடைத்ததால் இயற்கை விவசாயத்தை மேலும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். 2015ல் ஈஷா ஒருங்கிணைத்த சுபாஷ் பாலேக்கர் ஐயாவின் வகுப்பிலும் கலந்து கொண்டேன், அப்போது அவர் ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார், தற்போது ஒரு வெற்றி பெற்ற இயற்கை விவசாயியாக இருக்கிறேன்.
தற்போது 12 ஏக்கர் நஞ்சை நிலம் இருக்கு, இதில் பத்து ஏக்கர் சம்பா நெல் சாகுபடி செய்கிறேன், நெல் சாகுபடி முடிந்ததும், ஐந்து ஏக்கரில் எள்ளு அல்லது உளுந்து சாகுபடி செய்கிறேன், தொடர்ந்து நிலத்தை வளப்படுத்த ஒன்று அல்லது இரண்டு முறை பலதானியங்களை விதைத்துவிடுவேன். மீதமுள்ள இரண்டு ஏக்கரில் சிறுதானியங்களை சாகுபடி செய்கிறேன்.
நெல் சாகுபடியில் அனுபவமுள்ள பெரியவர்களின் தொடர்பு கிடைத்ததினால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அந்த முறையில் குறைந்தளவு விதைநெல்லைப் பயன்படுத்தி சாகுபடி செய்யத் துவங்கினேன்.
அந்தவகை சாகுபடியில் மாப்பிள்ளை சம்பா 45 மூட்டையும், பொன்னி 40 மூட்டையும் அறுவடை கிடைத்தது, நெல் நல்ல எடையுடன் இருந்ததால் அரைத்தபின் 75 கிலோ மூட்டைக்கு 50 கிலோ அரிசியும், 3 கிலோ நொய்யும் கிடைத்தது. சாதாரண முறை சாகுபடியில் 42 கிலோ அரிசிதான் கிடைக்கும்.

நல்ல மகசூலுக்கு நல்ல விதைகளும், விதைநேர்த்தியும் அவசியம். எனவே, விதைத்தேர்வில் கவனமாக இருக்கணும். முட்டைக்கரைசல் பயன்படுத்தி தேர்வு செய்த விதைகளையே பயன்படுத்தணும். புதிய இயற்கை விவசாயிகள் ஜீவாமிர்தத்துடன் மீன் அமிலத்தையும் பயன்படுத்துவது சிறந்தது. வளமில்லாத மண்ணிற்கு மீன் அமிலம் பாய்ச்சுவதன் மூலம் மண் வளமாகிறது, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மீன் அமிலம் அவசியம், அதன்பின் மீன் அமிலம் தேவைப்படாது. ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் பலதானிய விதைப்பு செய்து மண்ணை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எனது பண்ணைக்கு அருகில் உள்ள விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்கிறார்கள், எனக்கு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. எனக்கு ஆள்கூலி குறைகிறது, ஸ்பிரேயர் செலவு இல்லை, டிஏபி, யூரியா, பூச்சிக்கொல்லி செலவுகள் இல்லை. ரசாயன விவசாயத்தின் மூலம் அவர்களுக்கு என்னைவிட 5 மூட்டை நெல் கூடுதலாக வந்தாலும் அந்த நெல்லில் தரம் இல்லை, அரிசி எடை கிடைப்பதில்லை. விளையும் நெல்லை குறைவான விலைக்கே அவர்கள் விற்கிறார்கள், எனக்கு அவர்களைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது என்கிறார் ராதாகிருஷ்ணன்.
*எப்படி என்ற நம் கேள்விக்கு அவரே பதிலளிக்கிறார்.*

10 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால் 2 லட்சம் வரை செலவும், 5 லட்சம் வருமானமும் கிடைக்கிறது, செலவு போக நிகர வருமானமாக 3 லட்சம் கிடைக்கிறது. சிறுதானிய சாகுபடியின் மூலம் வரும் வருமானத்தையும் சேர்த்து 4 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மேலும் குடும்பத் தேவைக்கான காய்கறிகளையும் உற்பத்தி செய்து கொள்கிறேன். உப்பும், துவரம் பருப்பு மட்டுமே கடையில் இருந்து வாங்குகிறேன். **இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கியதிலிருந்து எனது வங்கிக் கணக்கில் எனது பணம் பத்திரமாக இருக்கிறது, நான் யாருக்கும் கடனாளியாக இல்லை, இது இயற்கை விவசாயத்தினால் எனக்குக் கிடைத்த வெற்றி!**
நாம தெரிஞ்சிகிட்ட விஷயத்தை மத்தவங்களுக்கும் சொல்லித்தரணும்னு முடிவு செஞ்சேன். **எனது பண்ணையில் அருகில் உள்ள சில விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக இருந்தார்கள், அவர்களுக்கு முட்டைக்கரைசல் மூலம் விதைத்தேர்வு செய்வதையும், பீஜாமிர்தம் மூலம் விதைநேர்த்தி செய்வதையும் சொல்லிக் கொடுத்தேன், அதன் பயனாக 25 மூட்டை விளைச்சல் எடுத்தவர்கள் தற்போது 35 மூட்டை வரை விளைச்சல் எடுக்கிறார்கள்.**
ஈஷா விவசாய இயக்கம் ஒருங்கிணைத்த ‘பூச்சிகளை கவனிங்க’ பயிற்சியில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து தெரிந்துகொண்டேன்.
பூச்சிக் கொல்லிகளால் நான் அடைந்த பாதிப்பு மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதே எனது விருப்பம், எனக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதினால் மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது என்ற அவரது வார்த்தைகளின் நிறைவு நம்மையும் தொற்றிக்கொண்டது என்பதுதான் நிதர்சனம்.
கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி
இயற்கை விவசாயத்துடன் இவர் இணைந்த கதையை அவர் மொழியில் கேட்க…
ஈஷா விவசாய இயக்கம்
இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற **83000 93777** என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
[சிறப்பு கட்டுரை: வறட்சியிலும் வாடாத இயற்கை விவசாயம்!](https://minnambalam.com/public/2020/10/28/8/iyarkai-vivasayam-isha-agro-movement)