கிருஷ்ணவேணியின் கதை
முக்கோண நடவு செய்யும் போது 15 சதவீதம் வரை கூடுதலாக வாழைமரம் நடமுடியும். பொதுவாக ஏக்கருக்கு 700 வாழை மரங்கள் நடவு செய்தால் இம்முறையில் 1000க்கும் மேற்பட்ட வாழையை நடவு செய்யது அதிக லாபம் பெறலாம் என்கிறார். மேட்டுப்பாளையம் நெல்லித் துறையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.
வாழை சாகுபடியில் *சதுர நடவு மற்றும் முக்கோண நடவு* என இரண்டு முறை பின்பற்றப்படுகிறது. முக்கோண முறையில் நடவு செய்யும் போது கூடுதலான எண்ணிக்கையில் வாழையை நடவு செய்ய முடியும். நல்ல லாபமும் கிடைக்கும், எனக்கூறும் கிருஷ்ணவேணி, சைக்காலஜியில் முதுநிலை பட்டம் பெற்றவர் தற்போது இயற்கை விவசாயியாக மாறியிருக்கிறார். அவரது அனுபவங்களை அவரே நம்முடன் கூறுகிறார்.
திருமணம் ஆனபின் ஓய்வு நேரத்தில் இயற்கை விவசாயம் குறித்த நம்மாழ்வார் ஐயா, சுபாஸ் பாலேக்கர் ஐயா போன்ற பெரியவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஈஷா நடத்திய இயற்கை விவசாயப் பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.” அந்த வகுப்பில் தென்னை மாதிரி, வாழைமாதிரி, மா மாதிரி என பல்வேறு பயிர்களுக்கும் ஊடுபயிரோடு எப்படி வளர்ப்பது என சொல்லிக் கொடுத்தனர்.
“பயிற்சிக்கு பின் இயற்கை விவசாயத்தை என்னாலும் செய்ய முடியும் என்ற தைரியம் கிடைத்தது. “மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை சாகுபடி சிறப்பான இருந்ததால், எங்களது 4½ ஏக்கர் நிலத்திலும் வாழைப்பயிரிட முடிவு செய்தேன். அந்த நிலம் பல வருடங்களாக ரசாயன விவசாயம் செய்து வளமிழந்திருந்தது எனினும் அந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்துவது என உறுதியாக முடிவு செய்தேன்.
முக்கோண நடவு செய்யும் போது மரங்களின் எண்ணிக்கை 15 சதவீதம் வரை கூடும். பொதுவாக ஒரு ஏக்கரில் 700 வாழை மரங்கள் நடவு செய்தால் இம்முறையில் ஏக்கரில் 1000க்கும் மேற்பட்ட வாழையை நடவு செய்ய முடியும்.* இரண்டரை ஏக்கரில் நேந்திரனும், இரண்டு ஏக்கரில் கதளியும் என நான்கரை ஏக்கர் நிலத்தில் 5200 வாழையை நடவு செய்தேன்.”
“ரசாயனத்தில் ஊறிப் போயிருந்த மண்ணை மாற்றுவதற்கு ஊடுபயிர்கள் சாகுபடி செய்தேன். தட்டப்பயிறு, உளுந்து, மக்கா சோளம், வெங்காயம், பச்சை மிளகாய் என ஊடுபயிர்கள் மூலம் கனிசமான வருமானம் கிடைத்தது. ஊடுபயிர் சாகுபடியினால் மண்ணின் தன்மையும் மாறியிருக்கு, ஊடுபயிரின் சருகுகளை எல்லாம் மண்ணிலேயே மூடாக்காக போட்டேன். தொடர்ந்து ஜீவாமிர்தம் கொடுப்பதினால் மூடாக்கு மக்கி மண்ணின் வளமும் அதிகரித்துள்ளது.” என்கிறார்.

முக்கோண நடவு சாகுபடி செய்யும் போது கன்றுக்கு கன்று 6 அடி இடைவெளியும் வரிசைக்கு வரிசை 4½ அடி இடைவெளியும் இருக்கும். **இதில் கவனிக்க வேண்டியது இரண்டாவது வரிசை நடும் போது மூன்று அடி தள்ளி நடவு செய்யும் போது முக்கோண வடிவில் அமையும். இந்த முறையில் நடவு செய்யும் போது ஒரு வாழைக்கும் மற்றொரு வாழைக்கும் 7 அடி இடைவெளி இருக்கும்.** இம்முறையில் நடவு செய்தால் சூரிய ஒளி எல்லா வாழைக்கும் சமமாகக் கிடைக்கும், சூரிய ஒளி நிலத்தில் விழும் அளவும் குறையும் என்பதால் களைகள் பெருமளவு குறைந்து விடும், இதனால் களையெடுக்கும் செலவு குறையும், மேலும் மண்ணில் நீர் ஆவியாதல் குறைந்து தண்ணீர் மிச்சமாகும். இது முக்கோண நடவு முறையின் சாதக அம்சங்கள்.
அதேபோல், எப்படிப்பட்ட நிலத்திலும் மூடாக்கு இட்டு ஜீவாமிர்தமும் கொடுத்தால் மண்ணில் மண்புழுக்கள் அதிகரிக்கும், மண்ணின் கரிம சத்து அதிகரித்து பொளபொளப்புத் தன்மையும் அதிகரிக்கும். இது இயற்கை விவசாயத்தின் அடிப்படையான விஷயம். தோட்டத்திற்கு மாதம் இரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஜீவாமிர்தத்தை பாசன நீருடன் கலந்து விடுகிறேன். கூடுதலாக மீன் அமிலத்தையும் இடுபொருளாகக் கொடுப்பதால் வாழை நன்றாக பச்சை கட்டி வளரும் என்று தான் பயிற்சியில் கலந்து கொண்டு கற்றுத்தேர்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் அதனை தான் பயன்படுத்தும் முறைகள் குறித்து நம்மிடம் விளக்கினார்.
“என்னோட பண்ணையை சுற்றி உள்ள எல்லோரும் ரசாயன விவசாயம் தான் செய்கிறார்கள், நான் எப்படி இயற்கை விவசாயம் செய்து ஜெயிக்கப் போகிறேன் என்று அவர்கள் என் நிலத்தை அடிக்கடி வந்து பார்ப்பார்கள், இப்படி பார்த்தவர்கள் எல்லோரும் தற்போது ஆச்சர்யப் படுகிறார்கள். முதல் சாகுபடியிலேயே தார் நல்லபடி வளர்ந்தது. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கு மேல் நிகர லாபம் கிடைத்தது. கடந்த ஆண்டு இந்த நிலத்தில் ரசாயன முறை சாகுபடியில் கிடைத்த வாழை அறுவடையை விட சற்று கூடுதலாகவே தற்போது அறுவடை கிடைத்துள்ளது.” என்கிறார்.
தனது அனுபவத்தின் மூலம் ரசாயன விவசாயம் செய்த வயலை எளிதாக இயற்கை விவசாய முறைக்கு மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ள கிருஷ்ணவேணியின் கதை இயற்கை விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளது என்பதுதான் கண்முன் நிதர்சனம்.
கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி
இயற்கை விவசாயத்துடன் இவர் இணைந்த கதையை அவர் மொழியில் கேட்க…
ஈஷா விவசாய இயக்கம்
இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற **83000 93777** என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
[சிறப்புக் கட்டுரை: பூச்சிக்கொல்லியைப் புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி!](https://minnambalam.com/public/2020/11/04/9/isha-agro-movement-radhakirushnan-story)