சிறப்புக் கட்டுரை: இயற்கை மரவள்ளியில் இனிய வருமானம்!

Published On:

| By Balaji

சாமிநாதனின் கதை

‘தொழிலையும் விவசாயத்தையும் ஒட்டுக்க பாக்குறதுக்கு ஒரு தெறம வேணுமுங்க’ எனக்கூறும் சாமிநாதன் திருப்பூரில் சிறு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பகுதிநேர விவசாயியான சுவாமிநாதன் கடந்த ஆறு வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது நிலத்தில் மரவள்ளிக்கிழங்கு, தென்னை மற்றும் வாழை ஆகியவற்றைப் பயிர் செய்கிறார். இவருக்கு 200 தென்னை மரங்கள் உள்ளன.

ADVERTISEMENT

அவினாசியின் நடுவச்சேரியில் உள்ள இவர், ‘வேளாண் தொழில்நுட்பங்களைக் கொண்டே பகுதிநேர விவசாயத்தில் பலே வருமானம் பார்க்க முடியும்’ என்கிறார். எப்படி என்ற நமது கேள்விக்கு அவரே விடை சொல்கிறார்.

‘எங்க ஊரு பூமிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கறதால ஒரு ஏக்கரில் மட்டுமே மரவள்ளிக்கிழங்கு பயிர் செஞ்சிருக்கேங்க. மீதியுள்ள நிலத்தில் கொள்ளுப் பயிரை உயிர் மூடாக்காக விதைச்சிருக்கேன். அடுத்த வருஷம் கொள்ளு விதைத்த நிலத்தில் மரவள்ளிக்கிழங்கையும், மரவள்ளி நட்ட இடத்தில் கொள்ளையும் மாற்றி பயிர் செய்வேங்க. கொள்ளு பயிர் செய்வதால் அந்த இடத்தில் தழைச்சத்து நிலைப்படுத்தப்படுவதோடு தேவையற்ற களைகள் முளைப்பதில்லை. கொள்ளு விதைத்து அதன்பின் மரவள்ளிக்கிழங்கை பயிர் செய்வதால் மகசூல் நன்றாக வரும்’ என்று கூறுகிறார் சாமிநாதன்.

ADVERTISEMENT

இயற்கை முறையில் பயிர் செய்வதால் கிழங்கு பெரிதாக வருகிறது என்றும் கூறுகிறார்.

சாதாரணமாக மரவள்ளிக்கிழங்கை 9 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். இதற்குமேல் தாமதமானால் கிழங்குகள் முற்றி வேர்கள் தடித்துவிடும். அதை சிப்ஸ் செய்யவோ, ஜவ்வரிசி செய்வதற்கோ விற்க இயலாது. ஆனால், ‘இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கிழங்குகள் 13 மாதங்கள் ஆனாலும் வேர் முற்றுவதில்லை. இதனால் அறுவடை செய்ய ஓரிரு மாதங்கள் தாமதமானாலும் விற்பனையில் பாதிப்பில்லை’ என்றும் அவர் கூறுகிறார்.

ADVERTISEMENT

அதேபோல், கிழங்குகள் அறுவடையான பின் மரவள்ளித் தண்டின் நுனியைக் கழித்து 3 முதல் 4 கணுக்கள் உள்ள கரணையாக வெட்டி 20 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி ஓலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும். இதனால் விதை கரணைகளை 30 நாட்கள் வரை பாதுகாக்க முடியும். கரணைகளை பச்சையாக நடுவதனால் முளைப்புத்திறன் குறைவதாகவும், 10 நாட்கள் இப்படி கட்டிவைத்த கரணைகளின் முளைப்புத்திறன் நன்றாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மழை பெய்யாவிட்டாலும் லாபம் பார்க்கலாம்

பொதுவாக மரவள்ளிப் பயிரை கள்ளிப்பூச்சி எனப்படும் மாவுப்பூச்சி தாக்கும். ஆனால் இயற்கை முறையில் பயிர் செய்வதால் கள்ளிப்பூச்சி தாக்குதல் இல்லை என்று கூறும் அவர், ‘மரவள்ளிகிழங்கு ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைத்தது’ என்றும், தற்போது மழை மிக குறைவாக இருந்தபோதும் 70% செடிகள் வரை பிழைத்துள்ளன என்றும் கூறுகிறார்.

‘இடிக்குற வானம் பெய்யாது, குலைக்குற நாய் கடிக்காது’னு எங்க ஊர்ல இருக்குற பெரிய வீட்டு ஆத்தா ஒரு சொலவடைய அடிக்கடி சொல்லுவாங்கோ. அதுமாதிரி மழையே இல்லாம வறட்சியாய் கெடக்கும்போதும் மரவள்ளி பயிரிட்டு லாபம் பார்க்க முடியுங்க என்று அறுதியிட்டுக் கூறுகிறார் சாமிநாதன்.

2015 டிசம்பரில் ஈஷா நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய வகுப்புல கலந்துகொண்டேன். அப்பத்துலேர்ந்து இப்ப வரைக்கும் இயற்கை விவசாயம்தாங்க எனக்கூறும் சாமிநாதன், சொட்டு நீர் குழாய்மூலம் பாசனத்துடன் ஜீவாமிர்தத்தையும் கலந்து விடுவதாகவும், வென்சுரி இல்லாமல் ஜீவாமிர்தத்தை வடிகட்டி பாசன நீரில் கலந்துவிட எளிமையான ஒரு வழிமுறையைத் தானே செயல்படுத்தியுள்ளதையும் தெரிவிக்கும் அவர், விவசாயத்திற்கான வரவு செலவுகள் அனைத்தையும் எழுதி வைத்திருக்கிறார். “உழுதவன் கணக்கு பார்த்தால்தான் உழைப்புக்குமேல் மிஞ்சும்” என்ற புதுமொழிக்கேற்ப, இயற்கை விவசாயிகள் அனைவரும் விவசாயத்துக்கான வரவு செலவுகளை எழுதி வைப்பது அவசியமாகும் என்கிறார் சாமிநாதன்.

கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி

ஈஷா விவசாய இயக்கம்

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற **83000 93777** என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்

[பூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி!](https://minnambalam.com/public/2020/11/04/9/isha-agro-movement-radhakirushnan-story)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share