சிறப்புக் கட்டுரை: கழிவுன்னு எதுவுமே இல்லை!

Published On:

| By Balaji

இயற்கை விவசாயம்… இரட்டிப்பு லாபம்!!

சொல்கிறார் விவசாயி துரைராஜ்

இந்த உலகத்துல எதுவுமே வேஸ்ட் கிடையாதுங்க. கழிவுகள்தான் விவசாயத்துக்கு ஆதாரம். நம்ம நிலத்தை பொன்னு விளையற பூமியா அது மாத்திடும் எனக்கூறும் துரைராஜ் 5 தலைமுறை கண்ட விவசாயி.

ADVERTISEMENT

தனது 50 வருட விவசாய காலத்தில். தான் இயற்கை விவசாயம் செய்யும் இந்த 4 வருடங்கள்தான் பொற்காலம் எனக்கூறும் இவர், வெறும் 28 ஆயிரம் சம்பாதிக்க 30 ஆயிரம் செலவு செஞ்சிட்டிருந்த நான் இன்னிக்கு ஒருகிலோ அரிசி 100 ரூபாய்க்கு விக்கறேன். அதாவது இரட்டிப்பு லாபம் பார்க்கறேன் என தனது வருமானம் பெருகிய கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

வருமானம் பெருகிய கதை

திருப்பூர் மாவட்டத்திலுள்ள சின்னகாம் பாளையத்தில் 20 ஏக்கர் நிலம் வச்சிருக்கேங்க. 12 ஏக்கர்ல தென்னை பயிரிட்டு இருக்கேன். மீதமுள்ள நிலத்தில மழைக்காலம்னா நெல்லு, மழை குறைஞ்சா நிலக்கடலை, எள்ளு பயிர் செய்வேங்க.

ADVERTISEMENT

ரசாயன உரத்துல நெல் விளைவிச்சபோது ஹைப்ரீட் ரகம் பயிர் செஞ்சு விதைநெல்லா கொடுத்திட்டு இருந்தோம். ஏக்கருக்கு இப்ப வர்ற அதே 40 மூட்டை விளைவிப்போம். ஆனால், ஒரு மூட்டை நெல்லுக்கு 700 ரூபா தாண்டாது. அதுக்கு பயிரிடற செலவு தவிர ரசாயன மருந்துக்கு தனியா செலவு பண்ணனும். 1 ஏக்கருக்கு நிறைய பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கும். உரம், பூச்சிமருந்துக்கு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபா வரைக்கும் செலவாகும்.

வரவுக்கும் செலவுக்கும் கட்டாத சூழல்லதான் ஈஷா விவசாய இயக்கத்தின் மூலமா 8 நாள் இயற்கை விவசாய பயிற்சிக்கு போனோம்ங்க. அதுக்கப்புறம்கூட இரண்டு பயிற்சி போயிட்டேன். அங்க கேட்ட எல்லாமே எனக்கு புதுசா இருந்துதுங்க. வந்தவுடனே ரசாயன உரத்தை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டேன். இனி நான் புது மனுஷன், பூச்சிகொல்லிய தொடரதில்லை. மண்ணை மலடாக்கறதில்லைன்னு தீர்மானமா முடிவுபண்ணிட்டேன்.

ADVERTISEMENT

வறட்சிங்கற பேச்சுக்கே இடமில்லை

இந்த உலகத்துல கழிவுன்னு நாம நினைக்கிற அத்தனையும் மண்ணுக்கான உரங்கறத புரிஞ்சிட்டேன். என்னோட தென்னந்தோப்புக்கு ட்ரன்ச் போட்டேன். குழியைத் தோண்டி அதுக்குள்ளாற தாவரக்கழிவிலிருந்து, இயற்கையா இருக்கற அத்தனை கழிவுகளையும் கொட்றதுக்கு பேருதான் ட்ரென்ச், என் தோப்புல இருக்கற அத்தனை மரத்துக்கு இடுபொருள் தொடங்கி தண்ணி பாச்சறது வரைக்கும் எல்லாத்தையும் ட்ரன்ச் மூலமாகவே கொடுக்கறேன். காயும் பருமனா கிடைக்குது. கெடறது இல்ல. மரத்துக்கு 150 காய் கூட கிடைக்குது. வறட்சிங்கற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் துரைராஜ்.

அதுசரி நெல் பயிர்வச்ச கதையை கேக்க வந்த உங்ககிட்ட தென்னங்க குழந்தையைப் பத்தி சொல்றேன் பாருங்க என மீண்டும் தான் நெற்பயிர் வைத்த கதையை விவரிக்கிறார்.

பூச்சிமருந்தை மூட்டைக்கட்டின கையோட மண்புழு உரம் தயாரிச்சு நிலத்தில விட்டுட்டேன். மாட்டுசாணம்- மூத்திரம்- நாட்டுசக்கரை கொண்டு தயாரிக்கும் ஜீவாம்ருதம் கலந்து பயிருக்கு தண்ணியோட சேர்ந்து பாய்ச்சிட்டேன். பயிரு திண்ணுன்னு வர்ற நேரம், மா, பப்பாளி,புகையிலை இஞ்சி பச்சை மிளகாய் சீதா இலை நொச்சி இலை ஊமத்தம் இலையோட நாட்டு மாடு மூத்திரம் கலந்து பச்சை இலை கஷாயம் செஞ்சி தெளிச்சிட்டேன். அதோட. பூண்டு-இஞ்சி கரைசலை பூச்சிவிரட்டியா பயன்படுத்தினேன். கருது வெளி வந்ததும் மோர்புளிச்சு அடிச்சதால கருக்காய் போன்ற பாழ்நெல் வரலை. நெல்மணிக்கதிரும் செழிச்சு வளர்ந்து நல்ல அறுவடை எனக்கூறும் துரைராஜின் முகத்தில் பூரிப்பு.

ரசாயன உரம் போடும்போதும் இதே 40 மூட்டை நெல்லுதான் ஒரு ஏக்கருக்கு எடுப்போம். ஆனால், அதை விதை நெல்லாத்தான் விக்கமுடிஞ்சுது. மட்டுமில்லாம, செலவு அதிகம் – வரவு குறைவு. ஆனால், இப்ப என்னால 2 மூட்டைக்கு 75 கிலோ அரிசி எடுக்க முடியுது. 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கிறோம். நடவு, களை எடுக்கற செலவு தவிர வேற செலவு கிடையாது என நஷ்டத்திலிருந்து மீண்டது மட்டுமல்லாமல் இரட்டிப்பு லாபம் எப்படி வந்தது என்பதையும் ரூபாய் – பைசா கொண்டு விளக்குகிறார்.

ஆரோக்கியத்தின் ரகசியம்

இதுல இன்னொண்ணு என்னாங்கன்னா, பழக்கழிவு கொண்டு பழஈயம். மீன்கழிவு கொண்டு மீன்னமிலம், தாவரக்கழிவு கொண்டு தென்னையோட ட்ரன்ச்சுக்கு இடுபொருள் என கழிவுகளை கொண்டே மலடான மண்ணை வளமாக மாற்றிய வரலாறையும் சேர்த்துக் கூறுகிறார்.

என்னோட நிலம் ஒரு பறவைகள் சரணாலயங்க. அங்க, காகம், குருவி, மைனா, கொக்கு, நீர்காகம், குயில், மயில், தூக்கணாங்ககுருவி, மரங்கொத்தி, சிட்டுக்குருவி என எல்லாத்தையும் பார்க்கலாம் எனக்கூறும் அவர் பறவைகளின் எச்சமும் நிலத்திற்கான உரமே என்கிறார்.

இயற்கை எப்பவும் நம்மை ஏமாத்ததுங்க. இயற்கை விவசாயத்துல ஆரம்பத்துல வேலை அதிகம் . ஆனால், நிலம் பதப்பட்டு மகசூல் எடுக்க ஆரம்பிச்சாச்சுன்னா, அதுக்கப்புறம் லாபம்தான். கடனில்லாத வாழ்க்கை வேணும்னா, இயற்கைக்கு மாறுங்க என்கிறார் துரைராஜ்.

காசு, பணம் மட்டுமில்லாமல் சத்தான, ஆரோக்கியமான, நஞ்சில்லாத உணவை நாலு வருஷமா சாப்பிடறோம். மழைத்தண்ணியை சேர்த்து வச்சு அதிலதான் சமைக்கறோம். அதையே குடிக்கறோம். கடந்த 4 வருஷமா ஒருமுறைக்கூட சளின்னு படுத்ததில்லை என்று தனது ஆரோக்கியத்தின் ரகசியத்தையும் நம்மிடம் எடுத்துக்கூறும் துரைராஜ், மருத்துவமனை வேண்டாம், நோய் வேண்டாம்னு நினைக்கறவங்களுக்கு இயற்கையில விளைஞ்ச பொருள சாப்பிடறதும், இயற்கையோட இணைஞ்சு வாழறதும்தான் தீர்வு. நான் அதை நோக்கி நகர்ந்துட்டேன். எல்லாரும் அதை நோக்கி நகரணுங்கறதுதான் என்னோட விருப்பம் எனக்கூறும் துரைராஜின் மனநிறைவு நமது மனங்களையும் நிறைத்துவிடுகிறது.

கட்டுரையாளர் : உஷா பாரதி

ஈஷா விவசாய இயக்கம்

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share