சந்திரயான் 3: தள்ளி போகிறதா தரையிறக்கம்?

Published On:

| By christopher

நாளை சூழல் சாதகமாக அமையாவிட்டால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறக்கம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிலவில் தரையிறங்குவதற்காக சென்ற ரஷ்யாவின் ’லூனா 25’ தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது உலகமே இந்தியாவின் சந்திரயான் 3-யின் சிறு அசைவையும் பெருத்த கண்களுடன் உற்று நோக்கி வருகிறது.

ADVERTISEMENT

ஏனெனில் சந்திரயான் 3 தரையிறங்ககூடிய பகுதி என்பது அதைப் பற்றிய தகவல்கள் மிக மிக குறைவாக இருக்கும் பகுதியாகும். அதையும் தாண்டி உலகின் வல்லரசு நாடுகள் வேடிக்கை பார்க்க, அறிவியல் வளர்ச்சியில் முன்னிலையில் தொடர்ந்து வரும் இந்தியா நிலவின் தென் துருவ பகுதியில் இறங்கி சாதனை படைக்க உள்ளது.

சந்திரயான்-3-ன் ‘விக்ரம்’ லேண்டர் அதன் LHDAC கேமரா மூலம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு, அதில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் இடத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்து தேடிக் கொண்டிருக்கிறது. அந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சந்திரனின் தென் துருவத்தில் பெரிய கற்கள் மற்றும் குழிகள் இல்லாத இடத்தைக் கண்டறிய உதவும்.

ADVERTISEMENT

பாதுகாப்பான இடத்தை துல்லியமாக கண்டறியும்பட்சத்தில் முன்னரே கூறியபடி சரியாக நாளை மாலை 6:04 மணிக்கு உறுதியாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நிலவில் தரையிறக்கம் ஒத்திவைப்பு!

இந்த LHDAC கேமரா மூலம் தரையிறங்கும் தளத்தை மேப்பிங் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த கேமராவின் உதவியுடன், விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் அனைத்து சவால்களையும் தரையிறங்குவதற்கு முன்கூட்டியே பார்க்க முடிகிறது.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரனின் மேற்பரப்பைத் தொடவிருந்தபோது, ​​ சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானது. இது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே லூனாவின் தோல்வி காரணமாக சந்திரயான்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் ஆகஸ்ட் 23 மாலை 5.45 மணியில் இருந்து 6.04க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒருவேளை நாளை சூழல் சாதகமாக அமையாவிட்டால் விக்ரம் லேண்டர் தரையிறக்கம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படும் என்ற உறுதிபடுத்தப்படாத தகவலும் வெளியாகியுள்ளது.

சந்திரயான்-2 போல் இல்லை!

இந்த நிலையில் தான், தரையிறக்கப்படும்போது தோல்வியை தழுவிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கொடுக்கும் தகவல்கள் இப்போது சந்திரயான் 3  விக்ரம் லேண்டர் நிலவில் தடம் பதிப்பதற்கு தற்போது உதவியாக இருந்து வருகிறது.

சந்திரயான் 2 தோல்வியின் போது கண்ணீர் சிந்த அழுத முன்னாள் இஸ்ரோ இயக்குநர் சிவன், தற்போது சந்திரயான் 3 பயணத்திட்டத்திலும் பெரும்பங்கு வகித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழில்நுட்பத்தில் பல மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் செய்துள்ளோம். சென்சார்களிலும் பெரிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திரயான்-2 இலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், சந்திரயான் 3 அதிக வலிமையுடன் முன்னேறி வருகிறது. சந்திரயான்-2 போல் அல்லாமல் இம்முறை அது வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று நம்புகிறோம்” என்று  சிவன் தெரிவித்துள்ளார்.

எந்த நிலையிலும் நிச்சயம் நிலவில் தரையிறங்கும்!

இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் விக்ரம் லேண்டர் தரையிறக்கம் பற்றி கூறுகையில், “ஒருவேளை அனைத்து சென்சார்களும், இரண்டு என்ஜின்களும் செயலழிந்து,  எதுவும் வேலை செய்யாது என்ற சூழல் வந்தாலும் கூட விக்ரம் லேண்டர் நிச்சயம் நிலவில் தரையிறங்கும். அதற்கேற்ற வகையில் தான் அல்காரிதம்கள் உருவாக்கப்பட்டுள்ள. அவை சரியாக வேலை செய்யும்  என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், “விக்ரம் லேண்டர் பிரக்யான் ரோவரை சுமந்து செல்கிறது. இது சந்திர மேற்பரப்பில் இருந்து தரவுகளை சேகரிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த வெற்றிகரமான சாஃப்ட் லேண்டிங் இஸ்ரோவின் எதிர்கால பணிகளுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழகம் முழுக்க போராட்டத்தில் இறங்கிய பகுதி நேர ஆசிரியர்கள்! 

‘குஷி’ படம் நிச்சயமாக குஷிப்படுத்தும் – விஜய் தேவரகொண்டா

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share