’குப்த்’, ‘கரீப்’, ‘சோல்ஜர்’ என்று 2000களில் இருந்த இளைய தலைமுறையினரை ஆட்டுவித்தவர் இந்தி நடிகர் பாபி தியோல். தோள் வரை புரளும் அவரது சுருள் கற்றை முடிக்காகவே அவரை ரசித்தவர்கள் பலர் உண்டு. ’ட்ரிம்’ கட்டுக்கு அவர் மாறியதும், அவரது படங்களுக்கான வரவேற்பு குறைந்ததும் தற்செயலானதா என்று தெரியவில்லை. நீண்டகாலம் புகழ் வெளிச்சம் படாமல் இருந்த அவரை ‘ஜென்ஸீ’ ரசிகர்களும் கொண்டாடச் செய்தது ‘அனிமல்’. அவர் ஏற்ற ‘அப்ரார் ஹக்’ பாத்திரத்திற்கான ‘அறிமுக இசை’ இன்றும் பலரது மொபைல்போன்களின் ‘ரிங்டோன்’ ஆக உள்ளது.
அந்த படத்தின் தொடர்ச்சியாக தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளில் அவர் வில்லன் பாத்திரங்களில் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றுள் ஒன்றாக உள்ளது, விஜய் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகிற ‘ஜனநாயகன்’.
சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியொன்றில், ஜனநாயகன் பட அனுபவம் எப்படியிருந்தது எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் பாபி தியோல்.

‘ஜனநாயகன் படத்தில் பெரும்பாலான காட்சிகள் ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டன. ’வெளிப்புற இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் பெரியளவில் சேரும்; அதனால் ஒழுங்காக வேலையை முடிக்க முடியாது’ என்றார் இயக்குனர். அதனைத் தவிர்ப்பதற்காக நிறைய காட்சிகள் ஸ்டூடியோவிலே படமாக்கப்பட்டன’ என்றிருக்கிறார் பாபி தியோல்.
ஜனநாயகனுக்குப் பிறகு முழுக்க அரசியலில் ஈடுபடத் தீர்மானித்திருப்பதாகப் படப்பிடிப்பில் விஜய் தெரிவித்ததாகவும், அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
தான் நடிக்கிற படங்களில் தனது இருப்பும் நடிப்பும் ஒரு அங்கமாகத் திகழ வேண்டும் என்று பாபி தியோல் தெரிவித்திருக்கிறார்.
தற்போது அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் பாபி தியோல் நடித்துள்ள ‘பந்தர்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ‘அந்த படத்தில் நடித்தது ஒரு வொர்க்ஷாப்பில் கலந்து கொண்டது போலிருந்தது’ என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
சரி, அது ’படமாக’ இருக்குமா இல்ல ’பாடமாக’ இருக்குமா?
