விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களும் வெற்றியா? – தனஞ்ஜெயன் பேச்சால் குழப்பம்!

Published On:

| By uthay Padagalingam

is vijay antony production all film get success?

ஒரு திரைப்படத்தின் கதையைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அதற்கான முன் தயாரிப்பு பணிகளைத் திறம்பட மேற்கொண்டு, படப்பிடிப்பினை உரிய காலத்தில் சரியான வகையில் நிறைவு செய்து, பின் தயாரிப்பு பணிகளைச் செப்பனிட்டு, குறிப்பிட்ட தேதியில் தியேட்டரில் வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும் என்பதே பல தயாரிப்பாளர்களின் நிலைமை. is vijay antony production all film get success?

சரியான மனிதர்களைக் கொண்டு சரியாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற பணிகள் மிகச்சரியான வெற்றியைத் தேடித் தரும்.

ADVERTISEMENT

அப்படியொரு வெற்றியை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் பெற்று வருவதாகக் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன். ’மார்கன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இதனை அவர் தெரிவித்திருக்கிறார்.

”விஜய் ஆண்டனி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ஒரு படம் கூட வணிகரீதியில் தோல்வி இல்லை. இன்று மார்கன் படத்தை எடுத்துக்கொண்டால் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை, இந்தி டப்பிங் உரிமை, தியேட்டர் வியாபாரம் என்று அனைத்துமே நல்ல விலைக்குப் போயிருக்கிறது. தெலுங்கு டப்பிங் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. பட வெளியீட்டுக்கு முன்னதாகவே நல்ல லாபம் பார்த்திருக்கிறார். இனி மக்கள் தரும் தீர்ப்பை பொறுத்து இப்படம் வெற்றி பெறும்” என்று கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

டிஜிட்டல் உரிமை வாங்குவதற்காகத் திரையிடப்பட்டபோது, மார்கன் படத்தைப் பார்த்து பிரமித்ததாகச் சொல்லியிருக்கிறார் தனஞ்ஜெயன். மேலும், சமீபத்தில் வந்த ‘ஜெண்டில்வுமன்’, ‘எமகாதகி’ இரு படங்களையும் பார்த்துவிட்டு, விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனத்தில் அவற்றின் இயக்குனர்களைக் கொண்டு அடுத்த படங்களைத் தயாரித்து வருகிறார் என்றும் கூறியிருக்கிறார்.

’நூறு சதவீதம் லாபகரமான தயாரிப்பாளர்’ என்று தனஞ்ஜெயன் சொன்னது குறித்து பத்திரிகையாளர்கள் விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்கு, ‘நாயகனாக நானே நடிப்பதால் அந்த சம்பளம் கிடையாது. நானே இசையமைக்கிறேன். சில படங்களுக்கு நானே எடிட் செய்திருக்கிறேன். டிஐ முதல் எல்லா நுட்பங்களும் எனது ஸ்டூடியோவில் இருக்கிறது.

ஒவ்வொரு இயக்குனரிடமும் 120 நாட்களுக்குள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்தி முடித்து விடுங்கள் என்று சொல்லிவிடுவேன். தயாரிப்பில் 4 மாதம், பின் தயாரிப்பு பணிகளில் 3 மாதம் என்று குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடித்துவிடுவதால் வீணாக வட்டி கட்ட வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. இவையனைத்தையும் சேர்த்து தான் தனஞ்ஜெயன் சார் எனது நிறுவனம் லாபகரமானது என்று சொன்னார்” என விளக்கம் தந்தார் விஜய் ஆண்டனி.

கூடவே, இப்போது வரை தான் தயாரித்த, தயாரிக்கிற படங்களுக்குக் கடன் வாங்கி வட்டியைக் கட்டி வருவதாகச் சொன்னார்.

’அப்படின்னா, லாபகரமான தயாரிப்பாளர்னா என்னதான் அர்த்தம்’ என்று இந்த பேச்சு குறித்து தனியாகச் சிலர் சமூகவலைதளங்களில் தலையைச் சொறிந்து கொண்டிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share