தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்?

Published On:

| By Pandeeswari Gurusamy

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொங்கலுக்குப் பிறகு கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன.

ADVERTISEMENT

எதிர்க்கட்சியாக அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவை அதிமுக கூட்டணிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய மாட்டேன் எனத் தொடர்ந்து கூறி வந்தார்.

ADVERTISEMENT

வரும் ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்ச்சியின் வரவேற்பு பதாகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் ஏற்கனவே வெளியேறிய நிலையில், மீண்டும் இணைந்ததாக அவரது தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பேனரில் டிடிவி தினகரன் படம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன், கூட்டணி தொடர்பாக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எந்தத் தயக்கமோ, குழப்பமோ, அழுத்தமோ இல்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share