திருச்சியில் திருட்டு கார்களை வாங்கி விற்பனை செய்து தாதாவாக கொழுத்து வலம் வந்த பிரபு என்ற பிரபாகரனை அவரது அலுவலகத்துக்குள் புகுந்து வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் மர்ம நபர்கள்.
இந்த கொலையோடு அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கும் முடிச்சு போட்டு பேசப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மைத் தன்மை குறித்து விரிவான விசாரணையில் இறங்கினோம்.
திருச்சி மாநகரத்தில் அரசு தலைமை மருத்துவமனையை நம்பி ஆம்புலன்ஸ் வாகனத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்தவர் பிரபு, இதனாலேயே ஆம்புலன்ஸ் பிரபு என அழைக்கப்பட்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகமானது, ஓட்டுநர்கள் பலரை வைத்துக் கொண்டு ஜி ஹெச் ஏரியாவில் குட்டி தாதாவாகவும் கூடவே மன்மத ராஜாவாகவும் வலம் வந்தார் ஆம்புலன்ஸ் பிரபு.
இது ஒருபக்கம் என்றால் இவரது வெளி வேலைகளைப் பார்த்து பாமகவில் திருச்சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பதவியையும் கொடுத்தனர். இதனால் கெத்தும் கொஞ்சம் கூடியது, ஆள்பலமும் பெருகியது, ஆனால் ஆம்புலன்ஸ் பிரபுவின் உள் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவர பாமக தலைமை இப்பதவியில் இருந்து அவரை அகற்றி ஓரங்கட்டியது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு தனது அலுவலகமான தாயார் ஹோம் கேர் சர்வீஸில் நண்பர் ஒருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார் பிரபு. இரவு 9.30 மணியளவில் அந்த நண்பர் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டார். நண்பர் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஐந்து பேர் கொண்ட டீம் அங்கே வந்தது.. அவர்களில் 3 பேர் மட்டும் உள்ளே போக இருவர் வாசலில் நின்றனர்.
ஒருவேளை உள்ளே சென்ற மூவரிடம் இருந்தும் பிரபு தப்பித்து வெளியே ஓடி வந்தால், தப்பிக்கவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்த இருவரும் வாசலில் நின்றிருந்தனர்.
நண்பரை அனுப்பிவிட்டு தான் மட்டும் சைடு டிஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், ஆம்புலன்ஸ் பிரபுவை நெருங்கிய அந்த மூவர் கும்பல் சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு 9.45 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டது.

அக்கம் பக்கம் பரபரப்பாக, தகவல் போலீஸுக்கு சென்றது. இரவு 10 மணிக்கு திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் காமினி அவசரமாக புறப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். உடனே டிசி, ஜேசி, போன்ற அதிகாரிகளும் குவிந்தனர்.
கொலை பற்றி துப்பு துலக்க, டீம்களை அமைத்து ஒவ்வொரு டீமுக்கும் பணிகளை பிரித்துக் கொடுத்தார் கமிஷனர் காமினி. இதன்படியே ஒரு டீம் சிசிடிவி கேமராக்களில் பதிவானதை எடுத்து ஆள் அடையாளத்தை தேடியது.
இன்னொரு டீம் கன்ட்ரோல் அறையிலிருந்து அந்த நிமிடங்களின் கால் டீட்டெய்ல்ஸ், லொக்கேஷன் போன்ற விபரங்களை எடுத்தனர். இன்னொரு ஸ்பெஷல் டீம் கொலையாளிகளைத் தேடி சென்றது.
போலீஸின் பிடி இறுகியதாலும் தப்பிக்க வழியில்லாததாலும் வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி திருவரம்பூர் காவல் நிலையத்தில் இரவோடு இரவாக சரண்டரானார்கள் அந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள்.
அரியமங்கலம் லட்சுமணன், பஷீர், தஞ்சை ராஜேஷ், மகாதேவபுரம் ராஜேஷ் ஆகியோர் தான் அந்த நான்கு பேர். மொத்தம் ஐந்து பேரில் ஐந்தாவது ஆளான ஹரி என்கிற ஹரி கிருஷ்ணனை போலீஸார் தேடி வருகின்றனர். சரண்டர் ஆனவர்களை ஜிஹெச் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட பிரபு என்ற ஆம்புலன்ஸ் பிரபு தமிழ்நாட்டையே உலுக்கிய ராமஜெயம் கொலை வழக்கில் போலீஸாரால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர் என்பதால், ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம் என்ற ஒரு செய்தி திருச்சி வட்டாரத்தில் காட்டுத் தீயாக பரவியது. இதுபற்றி சிபிசிஐடி ஸ்பெஷல் டீம் போலீஸாரிடம் விசாரித்தோம்.
“அமைச்சர் கே. என்.நேருவின் தம்பி ராமஜெயம் 2012 மார்ச் 29 ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்றபோது ஒரு மர்ம கும்பல் அவரைக் கடத்திப்போய் கல்லணைச் சாலையில் காவிரிக் கரையோரத்தில் கொன்றுவிட்டு தப்பியது.
அந்த சம்பவத்தில் ஹுண்டாய் வெர்னா காரை கொலை கும்பல் பயன்படுத்தியது உறுதியானது. அதனால் அந்த காலகட்டத்தில் ஹூண்டாய் வெர்னா கார் விற்பனை செய்தவர்கள், வாங்கியவர்கள், திருட்டு கார் வாங்குபவர்கள், வாங்கி விற்பனை செய்பவர்களை லிஸ்ட் எடுத்து விசாரித்தோம். அதில் ஒருவன்தான் பிரபு என்ற பிரபாகரன். இவனை இதற்கு முன்பு ஏழு எட்டு முறை விசாரித்து விட்டோம். கடைசியாக கடந்த சனிக்கிழமை கூட விசாரித்தோம் அவ்வளவுதான்” என்றனர்.
பிரபு கொலை வழக்கு விசாரித்து வரும் ஸ்பெஷல் டீமிடம் விசாரித்தோம். ”கொல்லப்பட்ட பிரபு நல்லவர் இல்லை. ஜி.ஹெச்.சில் வேலை செய்யும் நர்ஸ்கள், ஆண் செவிலியர் உதவியாளர்கள் போன்றவர்களை கையாளாக வைத்திருந்தார். அவர்கள் மூலமாக எந்த வார்டில் எந்த பேஷன்ட் சீரியஸாக இருக்கிறார் வெண்டிலேட்டர் எடுத்துவிட்டால் இறந்து விடுவார் என்று தெரிந்துகொண்டு பிரபுவின் ஆட்கள் அந்த வார்டை சுற்றி சுற்றி வருவார்கள். சமயம் பார்த்து வெண்டிலேட்டரை எடுத்து விட்டு கொன்று விடுவார்கள்.
உடனே அந்த குடும்பத்துக்கு உதவி செய்வதுபோல் நடித்து, பிரபு ஆம்புலன்ஸில் இறந்தவர் உடலை ஏற்றிபோய் பத்து மடங்கு அதிகமாக அநியாயமாக கட்டணத்தை வசூல் செய்துட்டு வருவார்கள். தன் பண ஆசைக்காக ஜி.ஹெச்.சில் சிகிச்சை பெற்று வந்த பலரை அநியாயமாக கொன்றவர்.
திருட்டு கார்களை குறைந்த விலையில் வாங்கி சேஸ் நெம்பர், இஞ்சின் நம்பர்களை மாற்றி நல்ல விலைக்கு விற்பார். பெரும்பாலான ரவுடிகள் தங்களுடைய கொலைச் சம்பவங்களை அரங்கேற்ற திருட்டு கார்களை பிரபுவிடம் தான் வாங்கிச் செல்வார்கள்.

நர்ஸுகள், துப்புரவு பணியாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அவர்களை நினைத்த நேரத்திற்கு வர சொல்லி அவர்களை தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியவர் தான் இந்த பிரபு. உடன் இருக்கும் நண்பர்களின் மனைவி மற்றும் அவர்களின் தங்கைகளை குறிவைத்து பண ஆசைகாட்டி காம இச்சையைத் தீர்த்துக்கொள்வார். இதனால் அவரது நண்பர்களே கடுமையான எதிரிகளாய் மாறினார்கள்.
பிரபுவுடன் லட்சுமணன் மற்றும் ஹரி என்ற ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாக இருந்து வந்தனர், ஒரு கட்டத்தில் பிரபு போக்கு சரியில்லாமல் விலகி தனியாக ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தனர். இதனால் தொழில் போட்டி ஏற்பட்டது. லட்சுமணன், ஹரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு மறைமுகமாக தொல்லையும் அதிகமாக கொடுத்து வந்துள்ளார் பிரபு. அதனால்தான் நேரம் பார்த்து ஸ்கெட்ச் போட்டு பிரபாகரனை அவரது அலுவலகத்திலேயே போட்டுத்தள்ளியுள்ளனர் ஹரி லட்சுமணன் டீம். இதில் ராமஜெயம் கொலை வழக்கோடு முடிச்சிடும் அளவுக்கு எதுவும் இல்லை” என்கிறார்கள்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொள்முதல் விலை : பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!










