பெண்களுக்கு இருப்பதைப் போலவே ஆண் பிள்ளைகள் சிலருக்கு மார்பகங்கள் பெரிதாக இருக்கும். இந்தப் பிரச்சினை ஆண் பிள்ளைகளை கடும் சிக்கலில் ஆழ்த்திவிடும். உடற்பயிற்சி செய்வதற்காக சட்டையைக் கழற்றுவதற்கு, நீச்சல் பயிற்சி செய்வதற்கு எனத் தங்கள் உடல் வெளிப்படும் சமயங்களில் எல்லாம் இவர்கள் மிகவும் வெட்கப்படுவார்கள்.
இந்தப் பிரச்சினையின் தீவிரம் புரியாமல் உடன் இருக்கும் நபர்கள் கேலி செய்வார்கள். மார்பகங்களைக் கிள்ளி விளையாடுவது, எள்ளி நகையாடுவது போன்ற சக நண்பர்களின் செயல்கள், பாதிக்கப்பட்டிருக்கும் ஆண் பிள்ளைகளின் மனதை இன்னும் அதிகமாகக் காயப்படுத்திவிடும்.
இதன் காரணமாக அவர்கள் தங்களைத் தாங்களே சுருக்கிக்கொள்வார்கள். அவர்களின் தன்னம்பிக்கையிலும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இந்தப் பிரச்சினை எதனால் ஏற்படுகிறது, இதற்கான தீர்வு என்ன? செக்ஸாலஜிஸ்ட்ஸ் சொல்லும் விளக்கம் இதோ…
“ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும், 12 வயது ஆகும்போது திடீரென்று வளர்ந்து வாட்டசாட்டமாக மாற ஆரம்பிப்பர். இதை ஆங்கிலத்தில் குரோத் ஸ்பர்ட் (Growth spurt) என்று சொல்வோம். இந்தக் காலகட்டத்தில் ஆண் பிள்ளைகளுக்கு மீசை, தாடி வளர ஆரம்பிக்கும். அக்குள் மற்றும் ஆணுறுப்பைச் சுற்றி ரோம வளர்ச்சி உண்டாகும். விரைகள் பெரிதாகும். தூக்கத்தில் விந்து வெளியேறத் தொடங்கும். இவர்களில் 2% – 3% ஆண் பிள்ளைகளுக்கு ஹார்மோன்களின் சுழற்சியில் உண்டாகும் மாற்றங்கள் காரணமாக அவர்களின் மார்பகங்கள் பெரிதாகலாம்.
இந்தக் காரணத்தினால் அவர்கள் திருநங்கையாக மாறிவிடுவார்கள் என்றெல்லாம் தவறான கற்பிதம் ஒன்று நடைமுறையில் சொல்லப்பட்டு வருகிறது. இதில் துளிகூட உண்மையில்லை. மனதளவில் தன்னைப் பெண்ணாக உணரும் ஓர் ஆண், தான் தவறான ஓர் உடலில் இருக்கிறோம் என நினைத்து, தன்னை உடலளவிலும் பெண்ணாக மாற்றிக்கொள்ளும்போது திருநங்கையாக மாறுகிறார். ஆனால், ஆண் பிள்ளைகளின் மார்பகங்கள் பெரிதாக இருக்கும் நிலை என்பது முற்றிலும் வேறொரு பிரச்னை. எனவே, இரண்டையும் ஒன்று சேர்த்து முடிச்சுப் போட்டுக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. சரியான மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டால் இந்த மார்பகங்கள் பெரிதாக இருக்கும் பிரச்னையை முற்றிலும் சரிசெய்துவிட முடியும்
இப்படிப்பட்ட சிக்கலுடன் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை முதலில் கனிவுடன் அணுகுங்கள். அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். தேவையான சிகிச்சைகளை சரியாக மேற்கொள்ளுங்கள்.
பொதுவாக இதற்கான சிகிச்சையில், அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் மார்பகப் பகுதிகள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும் என்றாலும், பதின்பருவ ஆண் பிள்ளைகளுக்கு எடுத்தவுடனேயே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. மிகவும் சிறு வயதிலேயே இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டால், மார்பகங்கள் மீண்டும் வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் ஓர் ஆண்மகனுக்கு 22 வயது ஆன பிறகுதான் இந்த அறுவை சிகிச்சை பொதுவாகச் செய்யப்படும். அதே சமயத்தில், ஓர் ஆண் பிள்ளையின் தன்னம்பிக்கையை இந்தப் பிரச்சினை மிக அதிகமாக பாதிக்கிறது என்றால், சிறுவயதிலேயேகூட இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துவிடுவர்’’ என்று நம்பிக்கை அளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி அடை!