அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வருகின்றன. US withdrawing from NATO
உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றத்திற்காக ரஷ்யாவை உலக அளவில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக நடத்தி வந்தன.
தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபரான பின்னர் அந்த நிலைமை மாறியிருக்கிறது.
சமீபத்தில் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த 6ஆவது வெளிநாட்டு விருந்தினரான உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிற்கும், டிரம்பிற்கும் இடையே நடந்த காரசாரமான பேச்சுகள் உலக அளவில் பேசு பொருளானது.
உக்ரேனுக்கு அமெரிக்கா அளித்து வந்த ஆதரவுக்கு பிரதிபலனாக அந்த நாட்டில் உள்ள கனிம வளங்களை காலவரையின்றி வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இதன் எதிரொலியாக உக்ரேனுக்கு வழங்கி வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தநிலையில் டிரம்ப் நாளை செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது நேட்டோ அமைப்பில் இருந்து விலகுவதை டிரம்ப் அறிவிப்பார் என தகவல்கள் வருகின்றன.
அமெரிக்காவின் பணக்காரரும் டிரம்பின் நண்பருமான எலோன் மஸ்க், ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் நேட்டோவிலிருந்து அமெரிக்கா விலகும் யோசனையை ஆதரித்துள்ளார்.
நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.
1949ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து இந்த கூட்டமைப்பை தொடங்கின. இந்த அமைப்பில் தற்போது 30க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. இதில் உள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்ற நாடுகள் உதவிக்கு வர ஒப்புக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. US withdrawing from NATO