தற்போதைய விலைவாசி ஏற்றத்தால் மாத சம்பளம் வாங்குபவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியுள்ளது.
மாதம் வந்தால் 15ஆம் தேதியிலேயே சம்பளப் பணம் தீர்ந்து போக, மீண்டும் ஒரு சம்பளம் அடுத்த 15 நாட்களுக்குக் கிடைக்குமா என எண்ணத் தொடங்குகிறோம்.
இதற்கு எப்படித் தீர்வு காண்பது என யூடியூபைத் திறந்தால், ‘20000 ரூபாய் சம்பளம் வாங்குற நீ எதுக்கு தியேட்டர் போய் படம் பார்க்கணும்’ என நம்மை மீண்டும் பயப்பட வைக்கின்றனர் சில பிரபல பொருளாதார நிபுணர்கள்.
பணத்தையும் சேமித்து வாழ்வையும் எந்தக் குறையுமின்றி ரசித்து வாழ்வது எப்படி?
அதற்கான டிப்ஸ்களுக்கு முன் ஒரு அடிப்படையான டிப்-ஐ பகிர்வது சரியாக இருக்கும். முதலில் உங்களது சம்பளத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான பணம் உங்களது வங்கிக் கணக்கில் எப்போதும் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
அந்தப் பணத்தை மிகவும் அவசரத் தேவைகளைத் தாண்டி எந்த ஒரு சூழலிலும் நீங்கள் தொடக் கூடாது. அந்தப் பணம் உங்களுக்கு எப்போதும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். பணிமாற்றம், அவசரக்காலம் என நெருக்கடிகளில் அது உங்களுக்கு உதவும்.
சரி, தற்போது விரிவான டிப்ஸ்களுக்குள் வருவோம். நாம் அனைவரும் சம்பளம் வாங்கியதும் முதலில் செய்யும் செலவுகளாக இருப்பது கடன் அடைப்பது தான்.
நம்மில் பலர், பெருமளவு பணத்தை அதற்கு மட்டுமே செலவிட்டு மீதியுள்ள நாட்களைக் கடத்த மீண்டும் கடனாளியாவோம்.
இத்தகைய பழக்கம் நம்மை நிச்சயம் முன்னேறச் செய்யாது. மாறாக நாம் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
நம் சம்பளத்தின் சிறிதளவு பங்கை தங்கத்திலோ, அல்லது வேறு ஏதாவது முதலீடுகளிலோ செலுத்துவது நல்லது.
இதை அந்த மாதத்தில் முதல் செலவாகவே நாம் கருத வேண்டும். இந்த வேலையை சம்பளம் வாங்கிய ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
அதன் பின், ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி அவைகளை மட்டுமே அளவாய் பயன்படுத்தி அந்த மாதத்தைக் கடக்க வேண்டும்.
இதனால் மாதக் கடைசியில் ஏற்படும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவீனத்தை நாம் தவிர்க்கலாம்.
இ.எம்.ஐ, மின்சாரம், வாடகை என அனைத்தையும் முதலில் சரியாக சம்பளம் வந்த ஐந்து நாட்களில் செலுத்தி விட வேண்டும். நம் வேலை, வாழ்க்கை முறை, வருமானம், இவைகளுக்கேற்ப நமது பிற செலவுகள் அமைவது நல்லது.
இத்தனை நாள் நாம் எந்தெந்த விஷயங்களில் அநாவசிய செலவுகளைச் செய்துள்ளோம் என்பதையும் கண்டறிந்து அதைத் தவிர்ப்பதன் மூலம் நம்மால் மேலும் சில பணத்தை சேமிக்க முடியும்.
வாழ்க்கை என்பது ரசித்து வாழ்வதற்கே. அதை எளிமையாகவும் செய்திட முடியும். அதன்படி நாம் திட்டமிட்டால் மிகுந்த சேமிப்பை காணலாம்.
எந்த வித ஆடம்பர விஷயத்துக்காகவும் கடன் வாங்குவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதைச் சரியாக கடைப்பிடித்தாலே போதும், வாழ்க்கையைச் சேமித்து, ரசித்து வாழலாம்.
இன்னும் ரூ.2000 நோட்டுகளை மாற்றவில்லையா? ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!
