மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு வருமான வரி விதிகள் 2026, பல முக்கிய கொடுப்பனவுகள் மற்றும் வரி விலக்கு வரம்புகளை அதிகரிக்க முன்மொழிகிறது. இந்த வரைவுகள் பிப்ரவரி 22 வரை பொதுமக்களின் கருத்துக்காக திறந்திருக்கும். இது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், பழைய வரி முறையைத் (Old Tax Regime) தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெறலாம்.
எந்த சலுகைகள் உயரும்?
வட்டி இல்லாத அல்லது சலுகைக் கடன்களுக்கான விலக்கு வரம்பை ரூ.20,000 இலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த இந்த வரைவு முன்மொழிகிறது. குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த பேமெண்டுகள் மாதத்திற்கு ரூ. 100 இலிருந்து ரூ.3,000 ஆகவும், விடுதி சார்ந்த பேமெண்டுகள் மாதத்திற்கு ரூ.300 இலிருந்து ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
வீட்டு வாடகைப் படி:
அதோடு, இலவச உணவுக்கான வரி விலக்கு ஒரு உணவிற்கு ரூ.50 இலிருந்து ரூ.200 ஆகவும், பரிசு வவுச்சர்களுக்கான வரம்பை ஆண்டுதோறும் ரூ.5,000 இலிருந்து ரூ.15,000 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களிலும் 50% வீட்டு வாடகைப் படி (HRA) விலக்கு இப்போது செயல்படுத்தப்பட உள்ளது.
பழைய வரி முறை எவ்வாறு பயனளிக்கும்?
இந்த விலக்கு வரம்புகளை அதிகரிப்பது சம்பளத்தின் வரி விதிக்கக்கூடிய பகுதியைக் குறைக்கும் என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காமல் அவர்களின் வரிப் பொறுப்பைக் குறைத்து அதிக நிகர வருமானத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.
சம்பளத்தில் என்ன தாக்கம் இருக்கும்?
ஒரு தனிநபர் 80C மற்றும் 80D போன்ற அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் விலக்குகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டால் ரூ.15 லட்சம் சம்பளத்தின் மீதான வரி சுமார் ரூ.41,496 ஆகக் குறையும். இது புதிய வரி முறையின் கீழ் ரூ.97,500 ஐ விடக் குறைவுதான். இதேபோல, ரூ.20 லட்சம் சம்பளத்தில் சுமார் ரூ.63,856 மற்றும் ரூ.25 லட்சம் சம்பளத்தில் ரூ.66,456 கூடுதல் சேமிப்பு சாத்தியமாகும். இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் பழைய வரி முறையின் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கும். சரியான வரி திட்டமிடல் மூலம் சம்பளம் பெறும் வர்க்கத்தினர் தங்கள் வரிப் பொறுப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
