அரசு ஊழியர்களுக்கு புது உத்தரவா?

Published On:

| By vanangamudi

மாநில அரசு ஊழியர்களுக்கு 1973-ல் உருவாக்கப்பட்ட நடத்தை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்து புதிய விதிகளை வெளியிட்டுள்ளதாக நாளிதழ்களில் இன்று (மார்ச் 7) செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தின் தணிக்கையாளர் வெங்கடேசன் நம்மிடம் கூறும்போது, Tamil Nadu Government Employees

“மாநில அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி தாள்களில் வந்த செய்தி புதிதாக நடத்தை விதிகளில் ஏற்படுத்தபட்டவை அல்ல. 1973-ல் நடத்தை விதிகள் ஏற்படுத்தி அரசாணை எண் 2226 public (Service-A) நாள் 18-8-1973 மூலம் அரசு ஊழியர்களுக்கான நடத்தைவிதிகள் வடிவமைக்கபட்டன. அப்போதே பத்திரிக்கையில் உள்ள அனைத்து விதிகளும் உள்ளன.

இதை எல்லாம் தாண்டிதான் 1988, 2003, 2016 வேலைநிறுத்தங்களை நடத்தி கோரிக்கைகளை வென்றோம். இந்த நடத்தைவிதிகள் இருப்பதால்தான் நீதிமன்றங்கள் வேலைநிறுத்தம் சட்டத்திற்கு புறம்பானவை என்று தீர்ப்புகள் வழங்குகின்றன.

அரசு சட்டபடியும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையிலும் நடந்தால் நாமும் சட்டபடி நடத்தை விதிகளை மீறாமல் நடக்கலாம். ஒருவர் மீறினால்தான் குற்றம். அரசு ஊழியர்- ஆசிரியர் சமூகம் ஒட்டு மொத்தமாக மீறினால் அது குற்றமாகாது.

அதனால்தான் கடந்த காலத்தில் நாம் நடத்திய வேலைநிறுத்தங்களில் எவ்வித பாதிப்பும் இன்றி பணிகாலமாக கருதப்பட்டு அதற்கான ஊதியத்தையும் பெற இயன்றது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூட வாயிற்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அடுத்து, 2003-ல், ஜெயலலிதா ஒரே ஆணையில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து உலக அளவில் International Labour Association கவனத்திற்கு சென்று கண்டனம் பெற்றார்.

2003 ஆகஸ்டு 6 ந் தேதி எம்.பி.ஷா, லக்‌ஷ்மணன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்பு சட்டம் 2-ம் பாகத்திலுள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, வன்முறையற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திட அரசு ஊழியர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இந்த அடிப்படை உரிமைகள் யாவும் அரசு நிர்ணயிக்கும் Reasonable Restrictions க்கு உட்பட்டதாகும்.

பல்வேறு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தங்களுடைய தீர்ப்புகளில் Reasonable Restrictions-க்கு உட்பட்டு அடிப்படை உரிமைகளை அரசு ஊழியர்கள் அனுபவிக்க தடையேதுமில்லை என தான் கூறியுள்ளன.

அரசு ஊழியர் அரசியலில் ஈடுபட்டவர் ஒருவரை டிஸ்மிஸ் செய்தது தவறு என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த அளவிற்கு நீதிமன்றங்கள் சமூக சிந்தனையோடு தீர்ப்புகளை வரைகின்றனர்.இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகமின்றி, அரசின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறுவதை நீதிமன்றங்கள் எதுவுமே இதுவரை தடுக்கவில்லை என்பதே உண்மை.

எனவே, மேற்படி திருத்தங்கள் யாவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மீறயதாகும் எனவும், நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சத்தை சரியாக உள்வாங்காமல் அவசர கதியில் செய்யப்பட்ட திருத்தங்கள் என கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டங்கள் 1975-ன் கீழ் சங்கங்கள் முறையாக பதிவு பெற்று, ஜனநாயக முறையில் செயற்குழு பேரவை விவாதங்களுக்கு பிறகு பெரும்பான்மை கருத்தொற்றுமை அடிப்படையில், இயக்கங்கள் திட்டமிடப்படுவதால், அரசு ஊழியர் நடத்தை விதிகள் இதற்கு பொருந்தாது என கொள்வோம்” என்று தெரிவித்தார். Tamil Nadu Government Employees

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share