தமிழ்நாடு கொலை மாநிலமா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல கலை மாநிலம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கணக்குக்காக சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, கண்துடைப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.

தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்து இன்று (ஜூலை 29) சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “எடப்பாடி பழனிசாமி கொலை மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால் தமிழ்நாடு கலை மற்றும் அறிவுசார் மாநிலம் என்று தெரிவித்துகொள்கிறோம். சமூக விரோதிகளை களையெடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.

அவருடைய ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையவை. ஆனால் இந்த ஆட்சியில் நடக்கும் சம்பவங்கள் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

கொடநாடு சம்பவத்தை எடுத்துகொண்டால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கேம்ப் அலுவலகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது எதோ சதி திட்டம் அடிப்படையில் நடந்திருக்கிறது.

கடந்த 26,27,28,29 தேதிகளில் நடந்ததாக 5 சம்பவங்களை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். இதில் ஒன்று புதுச்சேரியில் நடந்தது. மீதமுள்ள 4 அரசோடு தொடர்புடையது கிடையாது. எல்லாம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் முன்பு நான்கு கோடி மக்கள் தொகை இருந்தது. இது பல மடங்கு உயர்ந்து தற்போது 8 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் இதுபோன்று ஒரு சில சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. இது கூடவும் செய்யும் குறையவும் செய்யும்.  ஆனால் அதற்காக எந்த விதத்திலும் அரசாங்கம் பொறுப்பாக முடியாது.

யார் யாருக்கு முன்விரோதம் இருக்கிறது என்று கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்.

ரவுடிகளின் பட்டியலை எடுத்து அதில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்று கண்டறிந்து இதுபோன்று சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி காப்பதால் தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் இதை வேறு விதமாக மாற்றிவிட்டு தமிழகத்தை பின்னோக்கி தள்ளிவிட முடியுமா என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற சம்பவங்களுக்கு மக்கள் தொகை அதிகரிப்புதான் காரணம் என்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

“மக்கள் தொகைதான் வன்முறைக்கு காரணம் என்று சொல்ல முடியாது.  ஆனால் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது. அவர்களிடையே மோட்டிவும் இருக்கிறது. முன்விரோதத்தால் தான்  கொலைகள் நடக்கிறது. அரசாங்கத்தால் அல்ல அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர், “ ரவுடிகள் பட்டியல் எடுத்து நடவடிக்கை எடுத்த வருகிறோம். A பட்டியலில் உள்ளவர்களை கைது செய்து வருகிறோம். B பட்டியலில் உள்ளவர்களை விசாரித்து, நீங்கள் எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.

தற்போது 97 சதவிகிதம் சிறைகள் நிரம்பியுள்ளன” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

லெவல் கிராஸ் : விமர்சனம்!

தனியார் வசமாகும் அரசு போக்குவரத்துக்கழகம்? : சீமானுக்கு அமைச்சர் பதில்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share