நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார்.
2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்க உள்ளது.
திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026” நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 117 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட உள்ளனர். இதில் சீமான் தான் போட்டியிடும் தொகுதியையும் அறிவிக்க உள்ளார். இந்த முறை சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளையும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.
இதையடுத்து, கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், 2025ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது.இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்க உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
