காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் ஒரு பகுதியினர் தொழிற்சங்கம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சாம்சங் உற்பத்தி நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி, வேறு மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில், ‘சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றத் திட்டமிடவில்லை’ என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாம்சங் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் சாம்சங் ஒரு வலுவான பங்காளியாக உள்ளது மற்றும் மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு உறுதியளித்துள்ளது.
உற்பத்தி, ஆராய்ச்சி, பொறுப்பான குடியுரிமை மற்றும் மாற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் இந்திய அரசின் தொலைநோக்கை நனவாக்க, நாங்கள் பல்வேறு மாநிலங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். தமிழக அரசின் ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தை கைவிட வேண்டும்!
இதற்கிடையில் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்புமாறு மாநிலத்தில் உள்ள தொழில் அமைப்புகள் சாம்சங் ஊழியர்களை வலியுறுத்தியுள்ளன.
சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் விரைவில் தீர்வு காண சுமுகமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், ”அரசின் செயல்திறனுள்ள கொள்கைகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வதால், தமிழ்நாடு உற்பத்தித் துறையில் முன்னணியில் உள்ளது. தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்குவதற்கும் செழிப்பதற்கும் உகந்த சூழ்நிலையை வழங்குவதில் தமிழக அரசின் முயற்சிகளை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் குறித்து FICCI தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஜி.எஸ்.கே.வேலு கவலை தெரிவித்தார்.
அவர், “ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வைக் கண்டறிய நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் நலன்கள் நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று வேலு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா