பாஜகவில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் விரைவில் முக்கிய அரசியல் கட்சி ஒன்றில் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. is ranchana nachiyar join vijay party
பாஜக கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்தவர் ரஞ்சனா நாச்சியார். திடீரென இன்று (பிப்ரவரி 25) பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதில், “மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு, பாஜகவுடன் இயங்க முடியவில்லை.
இனி எனக்கென்று ஒரு இலக்கு, எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டேன், எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும், பதவியை வாரி தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும் என் முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன், நன்றியை நவில்கிறேன்.
என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புரட்சிப் பயணம். அது எழுச்சிப் பயணம். வரும் காலங்களில் இனி அதுவே வெற்றிப் பயணம்” என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவர் நாளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நாளை நடைபெறுகிறது. இதில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ரஞ்சனா நாச்சியாரும் ஒருவர் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவரிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “நான் பாஜகவில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். இதில் சில காரணங்களை சொல்லலாம். சிலவற்றை சொல்லமுடியாது” என்றார்.
அடுத்தது அதிமுகவா? தமிழக வெற்றிக் கழகமா? திமுகவா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு அவர், “எந்த கட்சியில் இருந்தாலும் மக்கள் பணிதான். அதற்கான அறிவிப்பை நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
இயக்குநர் பாலாவின் உடன் பிறந்த அண்ணனின் மகள் தான் இந்த ரஞ்சனா நாச்சியார். துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமான இவர், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
2023ல் அரசுப் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்தபடியும், படிக்கட்டிலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்த மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்ட விவகாரத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. is ranchana nachiyar join vijay party