பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிப்ரவரி 28ஆம் தேதி கலந்து கொள்ள இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரி 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி மதுரையில் நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தற்போது அந்த தேதி மார்ச் 1ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மார்ச் 1ஆம் தேதி தமிழகம் வர உள்ளார் என்பதை இன்று (பிப்ரவரி 6) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி படுத்தி உள்ளார்.
தமிழக வருகையின் போது, பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து நயினார் நகேந்திரன்செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயில் செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. காரணம் பெரும்பான்மை சமூக மக்கள் மனதில் திருப்பரங்குன்றத்தில் இன்னும் தீபம் ஏற்ற முடியவில்லை என்ற வேட்கை இருந்து கொண்டே இருக்கிறது. எனவே பிரதமர் வந்த பிறகாவது தீபம் ஏற்றப்படுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
