கோர்ட் கண்டனம்… பொன்முடியை அழைத்த ஸ்டாலின்… அமைச்சர் பதவி தப்புமா?

Published On:

| By vanangamudi

is ponmudy minister post in danger after HC attack

கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு விழா திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான சென்னை அன்பகத்தில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. is ponmudy minister post in danger after HC attack

இந்த விழாவில் வனத்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்த பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண் இனத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு ஆபாசமாக வெளிப்படையாக பேசினார் பொன்முடி.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பொன்முடிக்கு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

அதனைத்தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி பொன்முடியை ‘திமுக துணை பொதுச்செயலாளர்’ பதவியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் தலைவரான ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கட்சி நிகழ்ச்சிகளில் ஒதுங்கி இருக்கும் பொன்முடியை தன்னை சந்திக்க வருமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதனையடுத்து கடந்த 15ஆம் தேதி காலை வீட்டில் வந்து சந்திக்க வரட்டுமா என்று பொன்முடி கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்டாலின், வீட்டுக்கு வரவேண்டாம், சட்டமன்ற கேள்வி நேரத்தில், தன் அறையில் வந்து சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல்வர் அறையில் ஸ்டாலினை சந்தித்தபோது, சிறிதுநேரம் இருவரும் இறுக்கமான முகத்துடன் பேசாமல் இருந்தனர்.

அதன்பின்னர் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு பேசிய பொன்முடி, “தெரியாமல் நடந்துவிட்டது. இதுபோன்று இனிமேல் நடக்காது” என்று தெரிவித்தார்.

அதற்கு ஸ்டாலின், “இப்போது சூழ்நிலை சரியில்லை. கொஞ்சம் அமைதியாக இருங்கள். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

is ponmudy minister post in danger after HC attack

இந்த நிலையில் தான், அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 17ஆம் தேதி இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடியின் ஆபாச பேச்சை சுட்டிக்காட்டிய நீதிபதி, ”வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல பொன்முடியின் பேச்சு பெருவாரியாக சென்றடைந்துவிட்டது. அவர் மன்னிப்பு கேட்பதால் எந்த பயனும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவர் பேசிய பேச்சை இந்நேரம் வேறு யாராவது பேசி இருந்தால் அவர் மீது குறைந்தது 50 வழக்காவது போடப்பட்டிருக்கும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில், “பொன்முடி பேசியது தொடர்பாக 5 புகார்கள் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி எப்.ஐ.ஆர் போடப்படும்“ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதி, ஒரே குற்றத்திற்காக பொன்முடி மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்ய வேண்டாம். அது வழக்கை நீர்த்துபோகச் செய்துவிடும்., இதுவரை பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தயாராக இல்லை என்றால், அமைச்சருக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்தார்.

ஆபாச பேச்சு விவகாரத்தில் அரசுக்கு பெரும் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பொன்முடி மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்கின்றனர் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share