அன்புமணியின் நடைப்பயணத்திற்கு டிஜிபி தடைவிதிக்கவில்லை என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் ஜூலை 25ஆம் தேதி முதல் 100 நாள் நடைப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், பாமக கட்சி கொடியை பயன்படுத்தக் கூடாது. இந்த நடை பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. என்று டிஜிபியிடம் மனு அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று (ஜூலை 25) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில் பாமக நிறுவனரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் அன்புமணியின் நடைபயண நிகழ்ச்சிக்கான அனுமதி நிராகரிக்கப்படுகிறது என்பதை அவரது தரப்புக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் அன்புமணி ராமதாஸ் நடை பயணத்துக்கு டிஜிபி அனுமதி வழங்காமல் தடை விதித்ததாக செய்திகள் பரவின.
இதற்கு அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலுவை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “எங்கள் பயணத்துக்கு தடை விதிக்கவில்லை. திட்டமிட்டபடி நடைப்பயணம் தொடரும். டிஜிபி அறிக்கையில் ஏதோ குளறுபடி ஏற்பட்டுள்ளது. நடைப்பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டது என்று பரவுவது வதந்தி” என்று கூறினார்.
காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, “அந்த சுற்றறிக்கையில் சிறு தவறு நடந்துள்ளது. அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதிக்கவில்லை. இது தொடர்பாக அன்புமணி தரப்புக்கும் வாய்மொழியாக தகவல் தெரிவித்துள்ளோம” என்று தெரிவித்தனர்.
