விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து பாமக முடிவெடுக்கவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக கூட்டணியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பாமகவும், பாஜகவும் விக்கிரவாண்டியில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.
இதுவரை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமக, இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
அதேசமயம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாமக தலைவர் அன்புமணியிடம், ‘விக்கிரவாண்டியில் பாமக போட்டியிட்டால் சரியாக இருக்கும். பாமக போட்டியிட்டால் திமுகவுக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குமான போட்டியாக மாற்றி அதிமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளுவோம்.அதனால் எந்த கவலையும் இல்லாமல் பாமக போட்டியிடட்டும், பாஜக அனைத்து ஆதரவையும் வழங்கும்’ என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நேற்று மின்னம்பலத்தில், விக்கிரவாண்டி இடைத் தேர்தல்! முந்தும் திமுக… அன்புமணிக்கு அண்ணாமலையின் மெசேஜ்! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று (ஜூன் 13) தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதம் செய்தோம். எங்களுடைய முடிவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசிய பிறகு தெரிவிக்கிறோம்” என்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குவைத் தீ விபத்து: 5 தமிழர்கள் உயிரிழப்பு? – அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!