திமுக ஒன்றிய அவைத்தலைவர் மகன் விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி குண்டலப்பள்ளி ஊராட்சியில் உள்ள பண்டலத்தொட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேரணாம்பட்டு ஒன்றிய திமுக அவைத்தலைவராக உள்ளார்.
இவருக்கு சரண்குமார், நவீன்குமார், பிரசாத் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்தநிலையில் மாடுமேய்க்கச் சென்ற பிரசாத் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாத் தந்தை அளித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நாம் விசாரித்தபோது, “சீனிவாசனும் அவரது மகன் பிரசாத் இருவரும் கொட்டாறு பகுதியில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர். குறிப்பாக ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் மணல் கொள்ளையைப் பற்றி புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன பிரசாத் அக்டோபர் 15 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு வயலில் இறந்தநிலையில் மீட்கப்பட்டார்” என்கிறார்கள் பேரணாம்பட்டு ஊர் மக்கள்.

இதைப்பற்றி சீனிவாசனிடம் கேட்டோம்.
அவர், “ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மாடுகளை மேய்க்க ஓட்டிகிட்டு போனான். வழக்கமாக இங்கிருக்கும் ஆத்துபக்கம் விட்டுவிட்டு வந்துவிடுவான். மாடுகள் மேய்ந்துவிட்டு தானாகவே வீடு வந்து சேர்ந்துவிடும்.
அன்று காலை போனவன் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரவே இல்லை. நானும் என் இரண்டாவது மகன் நவீனும் மதியம் 1.30 மணி வரை போன் அடிச்சிக்கிட்டே இருந்தோம். ஆனால் பிரசாத் போன் எடுக்கவே இல்லை
சாயங்காலம் மாடு மேய்ந்த இடத்துக்கெல்லாம் போய் பார்த்தோம். எங்கேயும் காணோம் . அதன்பிறகு பிரசாத் போனும் சுவிட்ச் ஆப் ஆனது.
பிறகு பேரணாம்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். என் மகனை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று சொல்லியும் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையிலதான் செவ்வாய்க்கிழமை காலையில் என் மகன் கூட்டாளியான கார்த்திக், ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு பார்க்க சொன்னார். அந்த வயலுக்கு போய் பார்த்தால் பிரசாத் முகம் சிதறி போய் மின் கம்பி சுத்தப்பட்டு கால்கள் கருகிபோய் இறந்து கிடந்தான். உடலில் புழுக்கள் இருந்தன” என்றார்.
அவரிடம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என கேட்டோம்.
இதற்கு அவர், “மணல் கொள்ளையைத் தடுக்க தொடர்ந்து மனு கொடுத்தோம். தினம்தோறும் இரவு நேரத்தில் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் இரண்டு மூட்டைகளில் மணல் எடுத்து போவார்கள். இருபது பைக்கில் மணல் எடுத்து சென்றால் ஒரு மாட்டுவண்டி மணல் அளவு வரும். இன்னும் சில குரூப் டிராக்டர் மூலம் மணல் அடிப்பார்கள். நாங்களும் புகார் கொடுத்து ஓய்ந்துவிட்டோம். அதனால் மணல் கொள்ளையர்கள் கொலை செய்திருப்பார்களோ என தோன்றுகிறது. ஆனால் அவர்கள்தான் செய்தார்களா என தெரியவில்லை.
கார்த்திக், பிரசாத்தின் நண்பர். அவர் ஆன்லைன் விளையாட்டில் பல ஆயிரம் வென்றிருக்கிறார். சில லட்சம் ரூபாய் இழந்தும் இருக்கிறார்.
அவரிடம் தங்க நகைகள் நிறைய இருக்கிறது. என் மகன் பிரசாத் அவரிடம், உனக்கு எப்படி இவ்வளவு பணம் வருகிறது. குறுக்கு வழியில் ஏதேனும் வருகிறதா? என்று கேட்டிருக்கிறான். இதனால் கோபமான கார்த்திக் கொலை செய்தானா எனவும் தெரியவில்லை” என்றார் கண்ணீருடன்.
சீனிவாசன் குற்றச் சாட்டுகளைப் பற்றி டிஎஸ்பி ராமச்சந்திரனைத் தொடர்புக்கொண்டு கேட்டோம்.
“அவரின் சந்தேகங்களுக்கு எங்களிடம் ஆதாரம் இல்லை, பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் வந்தபிறகு நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
நாம் விசாரித்ததில், “மணல் கொள்ளை போவது உண்மைதான், மாவட்டத்தில் சட்டவிரோதமாக பிசினஸ் நடப்பதும் உண்மைதான்.
இந்த பகுதியில் வசிக்கும் மோகன் வயலுக்குள் காட்டு பன்றிகள் வருவதை தடுக்க மின் கம்பி வேலி அமைத்து கனெக்ஷன் கொடுத்துள்ளார். வழக்கமாக இரவில் கொக்கிப்போட்டு கனெக்ஷன் கொடுப்பவர், மறுநாள் காலையில் மின் கம்பியில் உள்ள கொக்கியை எடுத்துவிடுவார்.
ஆனால் சனிக்கிழமை இரவு கனெக்ஷன் கொடுத்தவர் ஞாயிறு காலையில் எடுக்காமல் விட்டுள்ளார். அந்த கம்பியில் தவறி விழுந்து பிரசாத் சிக்கினாரா அல்லது கொலைதானா என்று காவல்துறைதான் தெளிவுபடுத்த வேண்டும்.
சீனிவாசன் புகார் கொடுத்த அன்றே செல்போன் டவர் லொக்கேஷன் மற்றும் கால் டீடெய்ல்ஸ் எடுத்து தீவிரமாக விசாரித்திருந்தால் அன்றே என்ன நடந்தது என தெரியவந்திருக்கும்
48 மணி நேரம் ஆன பிறகு வயலில் கடந்த பிரசாத் உடல் பெற்றோர்களே கண்டு எடுத்ததால்தான் இத்தனை சந்தேகங்கள்” என்கிறார்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
‘அகண்டா – 2’: பாலய்யாவின் சம்பளம் இவ்வளவா?
குடியுரிமை சட்டப்பிரிவு 6A செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!