அதிமுகவின் தற்போதைய பொருளாளராக ஒ. பன்னீர்செல்வம் உள்ளார். இந்நிலையில் பன்னீரிடமிருந்து பொருளாளர் பதவியும் பறிப்பதற்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கோகுல இந்திரா பதிலளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறவுள்ளது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த 16 தீர்மானங்களைத் தவிர்த்து பன்னீரை பொருளாளர் பதவியிலிருந்து நீக்க ஒரு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும், அந்த பதவிக்கு நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய கட்சியின் மூத்த நிர்வாகிகளில் யாரேனும் ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கோகுல இந்திராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸை நீக்குவதற்கான தீர்மானம் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இன்று ஒற்றைத் தலைமை பற்றி மட்டுமே விவாதிக்கப்படும்” என்றார்.
-மோனிஷா
