செங்கோட்டையனிடம் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். Is ops spoke with admk ex minister sengottaiyan
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே 2022ஆம் ஆண்டு மோதல் உருவானது.
இபிஎஸ் வசம் அதிமுக செல்ல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய நிலையில், அணிகள் இணைப்பு தொடர்பாக தொடர்ந்து ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், ஓபிஎஸ்-ஐ ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக மறுத்து வருகிறார். தற்போது எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது மற்றும் அவருடைய பேச்சுக்கள் அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசும் மொழி சரியல்ல. அவர் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. மக்கள் கவனித்துக் கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “அண்ணன் செங்கோட்டையன் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தபோதில் இருந்து இன்று வரை கட்சிக்காக குரல் கொடுத்து வருபவர். எதையும் எதிர்பார்க்காமல், கட்சிக்காக உழைக்க கூடிய உன்னதத் தொண்டர்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அதிமுகவினர் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தனது வாக்குகளை பெறத் தவறிவிட்டது. பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்குவர முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று கூறினார்.
செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா அல்லது தொலைபேசியில் பேசுவீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “அதிமுக அணிகள் இணைய வேண்டும் என ஒத்த கருத்தோடு இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனிடம் பேசினீர்களா என்று மீண்டும் அழுத்தமாக கேட்க, “சொல்லனுமா.. எப்படியாவது சண்டையை இழுத்துவிட வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். அதனால் பல பிரச்னைகள் உருவாக வேண்டும்” என்று சிரித்தபடியே பதில் அளித்தார்.
மேலும், ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அது ரகசியம் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.