முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். Is OPS join with AIADMK
நெல்லையை சேர்ந்த அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 27) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லி சென்று வந்தது குறித்து பேசினார்.
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி, கல்வி திட்டத்துக்கான நிதி, தொகுதி மறுவரையறை ஆகியவை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
அப்போது அவரிடம், உங்களை தொடர்ந்து அண்ணாமலையும் டெல்லி சென்றிருக்கிறாரே என்ற கேள்விக்கு,
“அதைப்பற்றி அவரைத் தான் கேட்க வேண்டும்” என்றார்.
2026 கூட்டணி பேச்சுவார்த்தை எப்படி இருக்கும்?
“இன்னும் 11 மாத காலம் இருக்கிறது. அதற்கு முன்பு எந்த செய்தி சொன்னாலும் அது நிலைக்காது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி நடக்கும். அதிமுகவை பொறுத்தவரை திமுகவை தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துடைய கட்சிகளை நாங்கள் சேர்த்துக்கொள்வோம்”
பிரிந்து இருக்கும் சக்திகளை ஒன்று சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லியிருக்கிறாரே?
“எப்போதும் இப்படிதான் பேசிக்கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்ததுதான்.இந்த கட்சிகளை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இவர் ரவுடிகளை அழைத்துக்கொண்டு சென்று அடித்து உடைத்திருக்கிறார். இவருக்கு இந்த கட்சியில் இருக்க தகுதியில்லை. இணைத்துக்கொள்ளும் வாய்ப்பே இல்லை”
இவ்வாறு கூறினார் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்று கூறியிருந்தார். Is OPS join with AIADMK