குரங்கு அம்மை அவசர நிலையா? – உலக சுகாதார அமைப்பு ஆலோசனை!

Published On:

| By admin

வருகிற ஜூன் 23ஆம் தேதி குரங்கு அம்மை நோய் பரவல் குறித்து அவசர கூட்டம் நடக்க உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை நோயானது ஆப்பிரிக்காவில் பரவக்கூடிய தொற்று நோயாக அறியப்பட்டது. ஆனால் இது ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில் இது கொரோனா பெருந்தொற்றை போல பரவுமா என்று மக்களிடையே அச்சம் எழுந்த நிலையில், இது கொரோனா பரவலை போல உருவெடுக்க வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார மையம் கூறியிருந்தது. மேலும் இது நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடமிருந்துதான் பரவும் என்றும் தெரிவித்தது. ஆகையால் குரங்கு அம்மை நோய் தொற்றியவர்களிடம் தொடர்பில் இருக்கையில், முகக்கவசம் மற்றும் உடல்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இதை அவசர நிலையாகக் கருத வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க இந்த அவசர கூட்டம் நடைபெறுவதாக நேற்று (ஜூன் 14) தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த குரங்கு அம்மை நோய் பரவுவது கவலைக்குரியது. இது கொரோனா பெருந்தொற்று போல பரவ வாய்ப்புகள் குறைவுதான். இருப்பினும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதனால்தான், தற்போது இந்தப் பரவல் அவசர நிலையைப் பிரதிபலிக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு அடுத்த வாரம் சர்வதேச சுகாதார விதிமுறைகளின் கீழ் அவசரக் குழுவை கூட்ட முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share