ஒரு படம் தொடங்கப்படுவதற்கு முன்பாக, அது தொடர்பான யூகங்களில் தொடங்கி முற்றிலுமாக நிறைவுற்று திரையரங்குகளை அடையும் வரை பல தகவல்கள் ஊடகங்களில் உலா வரும். அது ரசிகர்களிடமும் பேசுபொருளாக மாறும். ஆனால், அதே படத்தை முதல்முறையாகப் பார்க்கும்போது நாம் கேள்விப்பட்டவற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது தெளிவாகப் புரிந்துவிடும். இப்படிப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அல்லது அதன் மாண்பை மட்டுப்படுத்தும் வகையில் பரவும் அத்தகவல்கள் ரசிகர்களின் மனதோடு ஆட்டமாடுவது எக்காலத்திலும் எவ்விடத்திலும் நிகழும் ஒரு விளையாட்டு தான்.
அந்த ஆட்டத்தின் முடிவில் ரசிகர்கள் உற்சாகமடைந்தால் ஒரு படம் வெற்றி பெறும். அது நடக்காத பட்சத்தில் பெரும் தோல்வியைச் சந்திக்கும். தற்போது வெளியான ‘ஜெயிலர்’ உட்பட மாபெரும் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும்.
அந்த வகையில், வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ வெற்றியை மறக்க முடியாது.

முந்தைய தகவல்கள்
ஒரு படத்தின் திரைக்கதை உருவாக்கத்தின்போது அல்லது படப்பிடிப்பு நிகழும்போது, எத்திசையில் இருந்தாவது சில தகவல்கள் வெளியே கசிந்துவிடும். அப்படித்தான், ‘மங்காத்தா’ கதையானது ஸ்டீவன் சோடர்பர்க் இயக்கிய ‘ஓசன்’ஸ் லெவன்’ படத்தின் தழுவல் என்ற செய்தி முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து, அதே போன்று ஒரு கொள்ளை சம்பந்தப்பட்டது என்ற தகவல் வெளியானது. இந்தியில் இம்ரான் ஹாஷ்மி நடித்த ‘ஜன்னத்’ படத்தின் ரீமேக் இது என்று முதலில் சொல்லப்பட்டது. பிறகு, இது ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான கதை என்று கூறப்பட்டது.
தொடக்கத்தில், அர்ஜுன் நடித்த பாத்திரத்தில் நாகார்ஜுனா நடிப்பதாகச் சொல்லப்பட்டது. தெலுங்கு பதிப்பில் அஜித் பாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும், அவரது வேடத்தில் அஜித் இடம்பெறுவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், எல்லாமே உறுதிப்படுத்தப்படாதவையாகவே இருந்தன.
போலவே, கதாநாயகியாக சமந்தா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஸ்ரேயா, நீது சந்திரா என்று பலரது பெயர்கள் வெளியாகி, இறுதியிலேயே த்ரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தத்தில், பிரேம்ஜியைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைவருமே இரண்டாவது, மூன்றாவது ‘சாய்ஸாக’ இருந்தவர்கள் என்பது ரொம்பவும் தாமதமாகவே தெரிய வந்தது.

படம் வெளியாவதற்கு முன்னரே, இதில் ஒரு ‘நெகட்டிவ்’ பாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. ‘டார்க் நைட்’ படத்தில் ஜோக்கராக வந்த ஹீத் லெட்ஜரின் நடிப்பைப் பார்த்த தாக்கத்தில் இப்படியொரு பாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. முதலில், ரசிகர்கள் அதனை நம்பவில்லை. ஏனென்றால், அந்த காலகட்டத்தில் முன்னணி நாயகர்கள் எவரும் வில்லத்தனமான வேடங்களை ஏற்கவில்லை.
ரஜினிகாந்த், சத்யராஜ் போன்று வில்லன் வேடங்களில் நடித்து நாயகர்கள் ஆனவர்கள் கூட அப்படியொரு முடிவை நோக்கி நகரவில்லை. ஜெமினி கணேசன், மோகன், சிவகுமார் போன்ற ஒரு சில நாயகர்களே அப்படிப்பட்ட துணிச்சலான முடிவுகளை எடுத்தனர் என்பது தமிழ் திரை வரலாறு. 2010ஆம் ஆண்டின் இறுதியில், மங்காத்தா குறித்து இப்படிப் பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்தன.
ஆனால், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று படம் வெளியானபோது அவற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது வெட்டவெளிச்சமானது.
தியேட்டர் அனுபவம்
அஜித்குமாரின் 50வது படம் என்பதைத் தாண்டி, பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் ’மங்காத்தா’ பார்க்க வந்தவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். அந்த அளவுக்கு, ஒவ்வொரு காட்சியும் அவர்களை இருக்கையோடு கட்டிப் போட்டது. நாயகனை உடனிருப்பவர்கள் துதி பாட வேண்டுமென்ற வழக்கத்தை உடைத்து, அஜித்தின் இமேஜுக்கு புறம்பான வசனங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. இடைவேளையின்போது, அவரே வில்லன் என்பது தெரிய வந்தது.
த்ரிஷா கண் முன்னே ஜெயபிரகாஷை காரில் இருந்து வெளியே தள்ளும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்துக்கும் மேலாக, சதுரங்கப் பலகையின் முன்னே நின்றுகொண்டு தன்னோடு கொள்ளையில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் எவ்வாறு செயல்படுவார்கள் என்று அஜித் பாத்திரம் யோசிக்கும் காட்சி கைத்தட்டல்களை வாரிக் குவித்தது. இவ்வாறு ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ காட்சிகள் நிறைய அப்படத்தில் உண்டு.

ஆனால், அந்த நெகட்டிவ் பாத்திரத்தின் தாக்கத்தோடு ரசிகர்கள் வீடு திரும்பக் கூடாது என்பதில் அஜித்தும் மங்காத்தா குழுவினரும் தெளிவாக இருந்தனர். அதனாலேயே, அப்படத்தின் இறுதியில் இடம்பெற்ற டைட்டில் காட்சியில் ‘ப்ளூப்பர்ஸ் வீடியோ’ போன்று ‘மேக்கிங்’ துணுக்குகள் இடம்பெற்றிருக்கும். அதாவது, இதுவரை நீங்கள் பார்த்தது ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் என்ற எண்ணத்தை அடிக்கோடிட்டு உணர்த்தும் உத்தி அது.
படம் வெளியாகி வசூலைக் குவித்த பின்னர், ‘ஒரு ஹீரோ இப்படி நீதிநெறியற்ற பாத்திரமொன்றில் நடிக்கலாமா’ என்ற கேள்வி வந்தபோதும் அதுவே அரணாக இருந்தது.
மீண்டும் ‘மங்காத்தா’
மங்காத்தா வெளியானபோது, ஒரு இக்கட்டான சூழலில் இருந்தார் அஜித். அரசியல் சார்பற்று தனது ரசிகர்கள் இருக்க வேண்டுமென்ற நோக்குடன், தனது ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்திருந்தார். அதன் எதிரொலியாக, ’ஒரு முன்னணி நட்சத்திரம் ரசிகர் மன்றம் இல்லாமல் இயங்கவே முடியாது’ என்றும், ’பழைய ஆதரவை மீண்டும் பெற முடியாது’ என்றும் கருத்துகள் குவிந்தன. உண்மையில், அதுவொரு அமிலச் சோதனை தான். ஆனால், அப்படி வந்த தகவல்களையெல்லாம் தவிடுபொடியாக்கிச் சாதாரண மக்களையும் தியேட்டருக்கு வரவழைத்தது ‘மங்காத்தா’.
அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி சில ஆண்டுகளாகவே இயக்குனர் வெங்கட்பிரபுவைத் துரத்துகிறது. கதையைத் தயார் செய்துவிட்டதாகவும், அஜித்தைச் சந்தித்து ஒப்புதல் பெறக் காத்திருப்பதாகவும், அவர் தொடர்ந்து பதிலளித்து வருகிறார். எத்திசையில் வேண்டுமானாலும் கதையை நகர்த்தலாம் என்ற வகையிலேயே ’மங்காத்தா’வும் முடிந்திருக்கும்.
ஆனால், ‘மங்காத்தா 2’ நிகழ்வதற்கான சாத்தியம் மிகக்குறைவே. காரணம், ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு தனது படங்களில் சமூக ஒழுக்கத்திற்குப் புறம்பான கருத்துகள், காட்சியமைப்புகள் இருக்கக் கூடாது என்பதில் அஜித் தீவிரம் காட்டிவருவதாகச் சொல்லப்படுகிறது. நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களில் இளைய தலைமுறையினருக்கான அறிவுரை மிக லேசான தொனியில் சொல்லப்பட்டிருப்பதும் கூட அதையே காட்டுகிறது.
தற்போது ‘விஜய் 68’ படம் தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் வெங்கட்பிரபு. அதில், விஜய் இரட்டை வேடம் ஏற்பதாகக் கூறப்படுகிறது.
‘மங்காத்தா’ படத்திலேயே அர்ஜுன் நடித்த பாத்திரத்தில் அவர் நடிக்க விரும்பியதாகவும், சில பேட்டிகளில் வெங்கட்பிரபு சொல்லியிருந்தார். அதுவே, அப்படத்தின் நேர்த்தியில் விஜய் காட்டிய ஈடுபாட்டைக் காட்டுகிறது. அந்த வகையில், வெங்கட்பிரபுவின் தற்போதைய படத்தின் கதை கூட ‘மங்காத்தா’வின் சாயலில் இருக்குமென்ற தகவலும் உலவுகிறது.

குறைந்தபட்சமாக, ‘மங்காத்தா’வை நினைவுகூரும் வகையில் சில அம்சங்கள் அந்த படத்தில் நிச்சயம் இடம்பெறும் என்று நம்பலாம். ஏனென்றால், மங்காத்தாவுக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கிய பிரியாணி, மாசு, மாநாடு படங்களில் கூட ஆக்ஷனுக்கான இடம் குறைவாகவே இருக்கும். விஜய் படத்தில் அதற்குச் சாத்தியமே இல்லை.
ஆதலால், ஆக்ஷனுக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அப்படத்தில் ‘மங்காத்தா’ ரெபரென்ஸ் இருக்குமென்று கூறலாம். உடனே, ‘கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்’ என்று கேள்வி கேட்க கூடாது. ‘மங்காத்தா’வில் ‘காவலன்’ படம் தியேட்டரில் ஓடுவதாகக் காட்டப்படுவது போல, இதிலும் அப்படத்தின் சில ஷாட்கள் மட்டுமாவது இடம்பெறலாம். யார் கண்டது?
சரி, இப்போது எதற்கு இந்தக் கதை என்று கேட்பது புரிகிறது. ‘மங்காத்தா’ போலவே, வெங்கபிரபு – விஜய் இணையும் படம் குறித்தும் தினமும் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்து ரசிகர்களும் பல விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ‘மங்காத்தா’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்தப் பேச்சோடு இதுவும் ஒன்றாகக் கலக்கட்டுமே என்ற நல்லெண்ணமே இக்கட்டுரையின் நோக்கம். இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மையா, இல்லையா என்பது ’விஜய் 68’ வெளியாகும்போது தெரிந்துவிடும்.
உதய் பாடகலிங்கம்
