கலைப்புலி தாணு தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். படம் பற்றிய அறிவிப்புக்கான முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள GRT நட்சத்திர விடுதியில் ஒரு மாலை நேரத்தில் நடைபெற்றது.
கமல் ரசிகரான தாணுவுக்கு நேர்ந்த சோகம்!
கலைப்புலி தாணு மனைவி காலமான துக்கத்தில் இருந்த போதும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் பங்கேற்ற அந்த நிகழ்வில் “ஆள வந்தான் என்னை ஆளவந்தான்” என்று சிலாகித்து பேசினார். படம் வெளியாகி முதல் நாளே திரையரங்குகளில் பார்வையாளர்கள் வருகை இன்றி பப்படமாகி போனது.
ஆளவந்தான் தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகதரமான படம் என்று ஊடகங்கள் பாராட்டியது. வசூல் ரீதியாக ஆளவந்தான் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. படத்தின் தயாரிப்பு மட்டுமல்ல, அதன் வியாபாரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கமல்ஹாசன் தாணுவை சுதந்திரமாக வியாபாரம் செய்ய விடாமல் அதிக விலைக்கு விற்று தருவதாகஆசை காட்டி தன் ரசிகரான கலைப்புலி தாணுவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
அவர் கூறியபடி வியாபாரம் செய்து கொடுக்கவில்லை. தாணு விருப்பபடி வியாபாரம் செய்திருந்தால் நஷ்டம் இன்றி தப்பி இருப்பார். கலைப்புலி தாணுவிற்கு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து அவர்மீண்டு வர கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்கவில்லை. படம் வெளியாகும் வரை கமல் ரசிகராக இருந்த கலைப்புலி தாணு அதன் பின் “ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் ” என பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது வரலாறு.
அதே போன்ற தொரு சம்பவம் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லிங்குசாமிக்கு “உத்தம வில்லன் ” படத்தை தயாரித்ததன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
கதையை மாற்றிய கமல்ஹாசன்
9 வருடங்கள் கடந்து அதற்கு நீதி கேட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து பக்க புகார் கடிதம் கொடுத்திருக்கிறார் படத்தை தயாரித்து வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போஸ்.
அந்த கடிதத்தில், “எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திரு.கமல் ஹாசன் அவர்களை 2013ஆம் ஆண்டு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிப்பதற்காக அணுகினோம். அதற்கு அவரும் சம்மதித்து எங்களிடம் ஒரு கதையை கூறினார்.
அந்த கதை எங்களுக்கு மிகவும் பிடித்திருந்த காரணத்தால் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் எங்கள் நிறுவனமான திருப்பதி பிரதர்ஸுக்கு முதல் பிரதி அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் படத்தை செய்து தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும் கமல் ஹாசன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.10 கோடிக்கும் மற்றும் வட இந்தியா உரிமை ரூ.5 கோடிக்கும் கமல்ஹாசன் எடுத்துக் கொண்டதால் மீதமுள்ள ரூ.35 கோடிக்கு (வெளிநாடு மற்றும் வட இந்தியா உரிமை இல்லாமல்) ஒப்பந்தம் இருவரிடையே கையெழுத்தானது.
ஒப்பந்தம் கையொப்பமான அன்றே ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு முன்பணமாக ரூ.15கோடி தரப்பட்டது. முன்பணம் தரப்பட்ட ஒரு வாரத்தில் கமல் ஹாசன் எங்களை அழைத்து முதலில் கூறிய கதை செய்யவில்லை என்றும், அதற்கு பதிலாக இப்போது வேறு ஒரு கதையை கூறுவதாகவும், இக்கதையை வேறொரு இயக்குனர் இயக்குவதாகவும் கூறினார். அந்த கதை எங்களுக்கு பிடிக்கவில்லை.
எனவே நாங்கள் அந்த கால கட்டத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த மலையாள படமான “திரிஷ்யம்” படத்தினை வெளியான மூன்றாவது நாளில் கமல் ஹாசனுக்கு திரையிட்டு காண்பித்து அந்த படத்தை நடித்து, தயாரித்து தருமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு கமல்ஹாசன் என்னுடைய சகோதரர் இயக்குனர் லிங்குசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ’ஏன் என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா’ என்றும் மேலும் கமல் ஹாசன் அவர்கள் அந்த “திரிஷ்யம்” கதையை படமாக்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறிவிட்டார்.
இதனால் நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தோம். ஆனால் அவர் எங்களிடம் மறுத்த “திரிஷ்யம்” பட கதையை ஓரிரு வாரங்கள் கழித்து வேறொரு நிறுவனத்திடம் கமல் ஹாசன் ஒப்பந்தம் செய்து கொண்டார். நாங்கள் முன் தொகை கொடுத்த பிறகும் வேறொரு நிறுவனத்திற்கு கமல் ஹாசன் ஒப்பந்தம் செய்ததை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளான நாங்கள் கமல் ஹாசன் அவர்களை அணுகி ”என்ன இப்படி செய்துவீட்டீர்களே?” என்று கேட்டோம். இதை சமாளிக்கும் விதமாக மீண்டும் ஒரு கதையை எங்களிடம் கூறினார், அந்த கதையும் எங்களுக்கு விருப்பமில்லாததால், கமல் ஹாசன் முதலில் கூறிய கதையையே எங்களுக்கு செய்து தருமாறு மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தோம்.
உத்தம வில்லனால் நெருக்கடி!
ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டு இந்தப்படம் என் மனதிற்கு நெருக்கமானதென்றும் அதற்கு “உத்தமவில்லன்” தலைப்பு வைத்து அதை தன் நண்பர் ரமேஷ் அரவிந்த் மூலம் இயக்கி தருவதாக தெரிவித்தார். அதில் ஏதாவது உங்களுக்கு தவறு நடக்கும் பட்சத்தில் படத்தின் நஷ்டத்தை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதியும் அளித்தார்.
அதை நம்பி நாங்களும் அந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டு மீதி தொகையான ரூ.20 கோடியை படத்தின் ஒவ்வொரு ஷூட்டிங் அட்டவணைப்படி எந்தவித தாமதமின்றி சரியான நேரத்தில் வங்கி மூலமாக பணத்தை கொடுத்து முடித்துவிட்டோம்.
“உத்தமவில்லன்” படம் பாதி தயாரிப்பில் இருந்த போது தான் கமல்ஹாசன் மற்றும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு தமிழ்நாடு திரைப்பட வினியாகஸ்தர்கள் சங்ககூட்டமைப்பு தடை (ரெட்கார்டு) விதித்திருப்பது தெரியவந்தது கேட்டு மிகவும் அதிர்ந்துவிட்டோம். இந்த படத்தை EROS INTERNATIONAL என்கிற நிறுவனம் மினிமம் கேரண்டி (MG) முறையில் எங்களிடமிருந்து வாங்கியிருந்தது. இந்த தடையை அறிந்த EROS INTERNATIONAL நிறுவனம் (MG) முறையில் வாங்கிய உரிமையை ரத்து செய்துவிட்டு முற்றிலுமாக இப்படத்திலிருந்து விலகியது எங்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர்கள் கொடுத்த முன்பணத்தை வட்டியுடன் கூடிய கடனாக மாற்றிக்கொண்டது.
இந்நிலையில் இப்பட திரையரங்கு வெளியீட்டிற்கு முன் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கமல்ஹாசன் மற்றும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது விதித்திருந்த தடையை எங்களின் பெரு முயற்சி மற்றும் பல தரப்பட்ட பேச்சு வார்த்தைகள் மூலம் தடையை நீக்கினோம்.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ்மொழி இசை வெளியீடு மிகச்சிறப்பான முறையில் சென்னையிலும் மற்றும் தெலுங்கு இசை வெளியீடு ஐதராபாத்திலும் நாங்கள் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக நடத்தினோம்.
கமல் ஹாசன் உத்தமவில்லன் படத்தின் முதல் பிரதி எடுத்து எங்களுக்கு போட்டு காண்பித்த போது எனக்கு (N.சுபாஷ் சந்திர போஸ்) படம் முற்றிலுமாக பிடிக்கவில்லை. ஆனால் என்னுடைய சகோதரர் இயக்குனர் லிங்குசாமி அதில் சில காட்சிகளை எடிட் செய்தும், மாற்றியும் பிறகு படத்தை வெளியிடலாம் என்ற கருத்தை அவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் சில நாட்கள் கழித்து நாங்கள் கூறிய காட்சிகளை எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே படத்தை வெளியிடலாமென்று கமல்ஹாசன் கூறிவிட்டார் .
நாங்கள் தமிழ்நாடு, ஆந்திரா ,கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் வெளியிட முயற்சி எடுத்த போது எவரும் இந்த படத்தை வெளியிட முன் வரவில்லை. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடியால் இத்திரைப்படம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியான மே1, 2015 அன்று ரிலீஸ் ஆகவில்லை.
இங்கு நடந்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்திருந்த கமல்ஹாசன், அதை பொருட்படுத்தாமல் தன் வசம் இருந்த வெளிநாட்டு (Overseas) உரிமையை வைத்து மே1, 2015 வெளிநாடு முழுவதும் படத்தை ரிலீஸ் செய்துவிட்டார். வெளிநாட்டில் இருந்து வந்த படத்தின் விமர்சனங்களால் இந்த படத்தை டிஸ்ட்ரிபியூஷன் முறைகளில் கூட வெளியிட யாரும் முன் வரவில்லை.
உத்தமவில்லன் நஷ்டத்தை ஏற்படுத்தியது!
இந்நிலையில் நாங்கள் கமல்ஹாசனை தொடர்புகொண்டு இந்தபடத்தின் வெளிநாட்டு ரிலீசால் எங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையை விவரித்தோம். கமல்ஹாசன் அவர்கள் முன்பே அளித்த உறுதியின்படி அவரின் சகோதரர் அமரர் சந்திரஹாசன் மற்றும் அவருடைய முன்னாள் & இந்நாள் மேலாளர் மூர்த்தி மூலம் அன்றைய தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி S.தாணு, துணை தலைவர்கள் S.கதிரேசன் ,P.L.தேனப்பன், செயலாளர்கள் T.சிவா , R.ராதாகிருஷ்ணன், பொருளாளர் சத்யஜோதி தியாகராஜன், தயாரிப்பாளர் “கோபுரம் பிலிம்ஸ்” அன்புச்செழியன் செயற்குழு உறுப்பினர்கள் மன்னன் , சௌந்திரபாண்டியன் மற்றும் பலர், அன்றைய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், அன்றைய விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் அருள்பதி, அன்றைய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிவா மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோரின் முன்னிலையில் எங்களுக்கு எழுத்துபூர்வமாக ரூ.30 கோடியில் (எல்லா வரிகளும் உட்பட) மீண்டும் ஒரு படம் செய்து தருவதாக உத்திரவாத கடிதமும், அந்த படத்தை அவருடைய நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஓர் இரவு (தூங்காவனம்) படத்திற்கு அடுத்து உடனடியாக தயாரித்து நடித்து தருவதாக உத்திரவாத கடிதமும் அளித்தார்.
இதை நம்பி நாங்கள் எங்கள் சொந்த செலவில் பெரும் தொகையை கடன் வாங்கி “உத்தமவில்லன்” படத்தை மே 2, 2015 அன்று வெளியிட்டோம். இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்து எங்கள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
கால்ஷீட் பெற்று தரவேண்டும்!
இந்நிலையில் சில மாதங்கள் கழித்து ஓர்இரவு (தூங்காவனம்) படத்தின் ஷூட்டிங் பாதி நிலையை தாண்டிய நிலையில், கமல் ஹாசன் தொலைபேசி அழைப்பின் பேரில் அவரை நேரில் சந்தித்தோம். அப்பொழுது கமல்ஹாசன், “நான் உங்களுக்கு ஒரு படம் ரூ.30 கோடியில் செய்துதருவதாக உத்திரவாதம் கொடுத்துள்ளேன். அதற்கு ஏன் நீங்கள் இப்பொழுது ஷூட்டிங் நடைபெற்று வரும் ஓர்இரவு (தூங்காவனம்) படத்தையே எடுத்துக்கொள்ளக்கூடாது?” என்று எங்களிடம் கேட்டார். அதற்கு நாங்கள் ”இந்த படம் எங்களுக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டு, எங்களுக்கு பிடித்த கதையில் ஒரு படத்தை செய்து தருமாறு மறுபடியும் கூறிவிட்டு வந்தோம்.
இதனால் அவர்கள் அளித்த உத்திரவாத கடிதத்தின் அடிப்படையில் பல முறை கமல்ஹாசனை நேரிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டோம். ஒன்பது வருடங்கள் கழிந்தும் இதுவரை எங்களுக்கு படம் செய்து தருவதாக கூறியவர் செய்து தரவில்லை. இப்பட வெளியீட்டிற்கு கடன் கொடுத்த அனைவரும் எங்களுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே நமது சங்கம் தலையிட்டு கமல் ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர் அளித்த உத்திரவாத கடிதத்தின்படி எங்களுக்கு விருப்பமான கதையில் நடித்து தயாரித்து தருவதற்கு கால்ஷீட் பெற்று தரும் படி பணிவுடன் கேட்டுகொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
1983 இல் ராஜீவுடன் அமேதியில் நுழைந்து… இன்று காங்கிரஸ் வேட்பாளர்: யார் இந்த கிஷோரி லால் ஷர்மா?