நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டு விலகிய காளியம்மாள் புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்து முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை தமிழ் சங்கம் சார்பில் பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காளியம்மாள் பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மொழி அழிந்தால் தமிழ் அழியும் என்று சீமான் பேசியதை காளியம்மாள் எடுத்துப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு , “மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை அண்ணன் சீமான் சொல்லி இருக்கிறார். உண்மையில் எனக்கு மொழி சார்ந்த ஒரு புரிதலை ஏற்படுத்தியது அவர்தான். அந்த கருத்துக்களை நான் உள்வாங்கி இருக்கிறேன். ஒரு கருத்தை யார் சொன்னார்கள் என்பதை எப்படி ஏற்றுக்கொள்கிறோமோ அதே போல் அது எந்த கருத்து.. அது எவ்வளவு தூரம் நமது வாழ்வியலுக்கு தேவை.. நமது அடுத்த தலைமுறைகளுக்கு அந்த வார்த்தையை கடத்த வேண்டும் என்பதுதான் முக்கியம். அதனால் ஒரு சரியான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அவருடைய அரசியல் பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் இன்று மயிலாடுதுறை தமிழ் சங்கத்தோடு சேர்ந்து இருக்கிறது. இனி மக்களோடு இருக்கும் என்றார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பேன் அவர்களுடைய பிரதிநிதியாக இருப்பேன். அதற்குரிய சூழல் விரைவில் வரும். வேறு கட்சியில் இணைவேனா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக காளியம்மாள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
