பியூட்டி டிப்ஸ்: தலைக்கு மருதாணி இலைகளை அரைத்து அப்படியே தடவிக்கொள்ளாதீர்கள்!

Published On:

| By Selvam

சிலர் தலைக்கு மருதாணி (ஹென்னா) தடவிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது தவறு என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர்கள்… அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்கள்.

“ஹென்னா எனப்படும் மருதாணி, கூந்தலுக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கக்கூடியது. மருதாணி ஆரஞ்சு நிறத்தில் இருந்தாலும், அத்துடன் சேர்க்கப்படும் பொருளின் தன்மைக்கேற்ப கூந்தலின் நிறம் மாறும்.

உதாரணத்துக்கு, மருதாணிப் பொடியுடன் காபி டிகாக்‌ஷன் சேர்த்தால் டார்க் பிரவுன் நிறத்திலும், டீ டிகாக்‌ஷன் சேரத்தால் லைட் பிரவுன் நிறத்திலும், பீட்ரூட் சாறு சேர்த்தால் ஊதா நிறத்திலும் மாறும்.

இப்படி எதைச் சேர்த்துப் போட்டாலும், அந்த நிறம் மட்டும் கூந்தலில் படியுமே தவிர, முடியை ஊடுருவி உள்ளே செல்லாது.

ஹேர்டை உபயோகிக்க விருப்பமில்லாதவர்கள் ஹென்னா உபயோகிக்கலாம். ஆனால், ஹென்னா போடுவதால் சிலருக்கு கூந்தல் முரடாக மாறலாம்.

குறிப்பாக, சுருட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்கெனவே கூந்தல் வறட்சியாக இருக்கும். அவர்கள் ஹென்னா உபயோகிக்கும்போது கூந்தல் வறட்சி இன்னும் அதிகமாகலாம். அதுவே ஸ்ட்ரெயிட் ஹேர் உள்ளவர்களுக்கு ஹென்னா நன்றாகப் பொருந்தும். சிலர் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து அப்படியே தலையில் தடவிக் கொள்கிறார்கள். அது தவறு.

அது ரொம்ப ஸ்ட்ராங்கானது என்பதால் கூந்தலை அளவுக்கதிகமாக வறண்டுபோகச் செய்துவிடும். எனவே, மருதாணி இலைகளைக் காயவைத்துப் பொடி செய்து உபயோகிப்பதுதான் சரியானது.

200 கிராம் மருதாணி பொடியுடன் 2 டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்துக்கொள்ளவும். 20 மில்லி காபி டிகாக்‌ஷனும் அரை எலுமிச்சைப்பழத்தின் சாறும், சிறிய கப் தயிரும், ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

வறண்ட கூந்தல் உள்ளவர்களுக்கு எண்ணெய் சேர்ப்பது உதவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளலாம், விருப்பமுள்ளவர்கள் முட்டை சேர்த்துக்கொள்ளலாம்.

முட்டை தவிர்த்து மற்ற எல்லா பொருள்களையும் முதல் நாள் இரவே இரும்புக் கடாயில் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் முட்டை சேர்த்துக் கலந்து தலையில் தடவி ஒன்றிரண்டு மணி நேரம் வைத்திருந்து அலசினால் நல்ல கலர் கிடைக்கும்” என்கிறார்கள்.

மேலும், “ஹென்னா ஏற்றுக்கொள்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, சிறிதளவு ஹென்னா கலவையை கூந்தலில் ஒரு பகுதியில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து அலசிப் பார்க்கலாம். அந்தப் பகுதியில் கலர் ஒட்டியிருக்கிறதா அல்லது கூந்தல் வறண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அதற்கேற்ப அதை உபயோகிப்பதா, வேண்டாமா என முடிவு செய்யலாம்” என்று விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: நாட்டுக் கதம்ப சாதம்

லிஸ்ட் இன்னும் நெறைய இருக்கு : அப்டேட் குமாரு

இயக்குனர் மோகன் ஜி கைது : தலைவர்கள் ரியாக்சன்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு மழை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share