தெலுங்கு ஹீரோக்கள் சம்பள விஷயத்தில் எவ்வளவு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள் என்பது பற்றி மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சொன்ன விஷயங்கள் தமிழ் ஹீரோக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் சொன்னது இதுதான்.
“ரங்கஸ்தலம் படம் பிளாக் பஸ்டர் ஆன பின்னும் ராம் சரண் தனது சம்பளத்தை வாங்கவில்லை. ஒரு வருடம் கழித்துதான் நாங்கள் அவருக்குப் பணம் கொடுத்தோம்.
ஓடிடி வருவாய் வந்த பிறகுதான் வால்டேர் வீரய்யா படத்துக்கான சம்பளத்தைத் தருமாறு சிரஞ்சீவி எங்களிடம் கேட்டார்.
தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எங்கள் நிதி நெருக்கடிகளை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள்.
ரிலீசுக்கு முன்பே பணம் கேட்டு எங்களுக்கு அழுத்தம் கொடுப்பது இல்லை” என்பதே அவர் சொல்லி இருக்கும் விஷயங்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழிலும் இரண்டு படம் எடுத்துள்ளது. ஒன்று அஜித் நடித்த குட் பேட் அக்லி. இன்னொன்று பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட்.
ஆக மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படி பேசும் அளவுக்கு அக்லியாக நடந்து கொண்ட டியூட் யார் என்பதை அவர் சொல்லவில்லை.
ஆனால் தெலுங்கில் நடக்கும் அந்தக் காத்திருப்பு தமிழில் நடக்க வாய்ப்பே இல்லை.
காரணம் தெலுங்குப் படங்களில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஹீரோக்கள் எல்லாரும் பக்கா தெலுங்கர்கள். தாமதம் ஆனாலும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற மாட்டார்கள். இன பாசத்தோடு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நடந்து கொள்வார்கள்.
ஆனால் தமிழ் சினிமா ஒரு சத்திரம் சாவடி மாதிரி. இங்கே யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகலாம். தயாரிப்பாளர் ஆகலாம். இயக்குனர் ஆகலாம். ஆகி இந்த மொழிக்கும் இனத்துக்கும் எதிராகவே படம் எடுக்கலாம். இந்த இனம் மொழிக்கு எதிராகப் பேசலாம்.
யாரவது அப்படிப் பேசும்போது கண்டித்தால் கண்டிப்பவரை எதிர்த்து காசுக்காக சோரம் போகும் கூட்டங்கள் இங்கு உண்டு.
அது மட்டுமல்ல.. மற்ற மாநிலங்களில் ஒரு நேரடி தமிழ்ப் படம் பற்றிய செய்தியை மற்ற மொழி மீடியாக்களில் கொண்டு போய் சேர்ப்பது சாதாரண விஷயம் இல்லை. அங்கு அந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள்.
ஆனால் இங்கே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்கள் பற்றிய செய்திகளை மட்டுமே இங்க உள்ள மீடியாக்களுக்கு கொடுக்கும் ஆட்கள் நிறைய உண்டு.
இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
அப்படி இருக்க வெளியே இருந்து வரும் ஒரு புரடியூசர் அப்புறமா சம்பளம் தர்றேன் என்று சொல்ல, அதை ஒரு ஹீரோ நம்பி விட்டால், படம் முடிந்ததும் சட்டென்று பெட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டால் அந்த ஹீரோ என்ன செய்வார்.
இன்னொரு பக்கம் இங்கே பல ஹீரோக்கள் மற்ற மொழியினர். அவர்கள் இங்கே எத்தனை கோடி சம்பாதித்தாலும் சொந்த மாநிலத்தில் முதலீடு செய்வதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
எனவே ஏதோ ஒரு தமிழ் தயாரிப்பாளருக்கு அல்லது வேறு ஏதோ ஒரு மொழி தயாரிப்பாளருக்கு நாம் ஏன் விட்டுத் தரவேண்டும். உடனே கிடைத்தால் வங்கியில் போட்டு வட்டி வர, அல்லது முதலீடு செய்து லாபம் பார்க்க உதவுமே என்றுதான் அவர்கள் சுயநலமாக நினைக்கிறார்கள்.
இன்னொரு வகையில் இதில் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது.
ஹீரோக்கள் இதற்கு ஒத்துக் கொண்டால் அடுத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், சிறு நடிகர்களுக்கும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும்.
அது போன்ற சமயங்களில் ஹீரோ ஹீரோயின் இயக்குனருக்கு வேண்டுமானால் தயாரிப்பாளர்கள் எப்படியாவது எப்பவாவது கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறு நடிகர்களிடம், “ஹீரோவே காசு இப்ப வேணாம்ன்னு சொல்லிட்டாரு. உனக்கு என்ன கேடு?’ என்று சொல்லி, அப்புறம் தர்றேன் தர்றேன் என்று சொல்லி கடைசியில் படம் நஷ்டம் ஆகிருச்சு. பணம் இல்லை என்று சொல்லி அவர்களை மொத்தமாக ஏய்க்கும் விஷயம் மேலும் அதிகமாகும்.
முதல் படத்தில் நடித்த நடிகர்களுக்கு சம்பளம் தரவில்லை என்பதற்காக, அதைக் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்று சொன்ன ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இருந்தார்கள். இப்போது இல்லை.
எனவே தெலுங்கு சினிமாவில் இருக்கும் இந்த புரிதல் தமிழ் சினிமாவிலும் வர வேண்டும் என்றால் தமிழ் சினிமா தமிழர்கள் கையில் வர வேண்டும்.
நடக்குமா?
— ராஜ திருமகன்
