ஈஷா யோகா மையம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்தார்.
வனத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஜூன் 25) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஹசன் மவுலானா, “கோவை ஈஷா யோகா மையம் அண்மையில் நடத்திய சிவராத்திரி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் யானைகள் வழித்தடத்தை வழிமறித்து நடத்தப்பட்டுள்ளது. ஈஷா யோகா மையம் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “இதையெல்லாம் கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுதி கொடுத்திருந்தால் விவாதித்திருக்கலாமே… சரி அமைச்சர் பதில் சொல்வார்” என்றார்.
இதையடுத்து ஹசன் மவுலானா கேள்விக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “யானை வழித்தடங்கள் பற்றி முழு அறிவு எல்லோருக்கும் கிடையாது. அரைகுறை அறிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதால் தான் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசுகிறேன். முதல்வர் தலைமையில் தீவிரமாக ஆய்வு செய்த பின்னர்தான் முடிவெடுக்க முடியும். அதனால் அவசரப்பட்டு எந்த கருத்தையும் சொல்ல வேண்டாம்” என்று பதிலளித்தார்.
அப்போது அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “நீங்கள் யானை வழித்தடங்களை பற்றி சொன்னீர்கள்… ஆனால் பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்திருக்கிறது. கட்டிடங்களை கட்டி ஈஷா யானை வழித்தடங்களை மறித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஈஷா வனத்துறையின் அனுமதி பெற்றுதான் அந்த இடங்களை எல்லாம் பிடித்ததா? யானை வழித்தடங்கள் மறிக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்படுவது உண்மையா? காப்பு காட்டு பகுதியில் ஈஷா கை வைத்திருக்கிறதா? இல்லையா? இதற்கு நேரடியாக அமைச்சரின் பதில் என்ன? ” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மதிவேந்தன், “முழுமையாக என்னென்ன விவரங்கள் என்று தெரிந்துகொண்டு தான் சொல்ல முடியும். அரைகுறையாக சொல்ல கூடாது. ஆய்வு செய்த பிறகு ஈஷா அனுமதி வாங்கியிருக்கிறதா? விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறதா? என பதிலளிக்கிறேன்” என்றார்.
இதற்கு துரைமுருகன், “நீங்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகாலம் ஆகிறது. இன்னும் ஆய்வு செய்யவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
சீனியர் அமைச்சர் ஜூனியர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது அவையில் கவனம் பெற்றது.
முன்னதாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஈஷா யோகா மையம் எந்த வன நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை… வன நிலத்தில் கட்டிடம் ஏதும் கட்டப்படவில்லை என்பது தெரியவந்தது.
அதுபோன்று ஈஷா மைய எல்லைகளை நில அளவை செய்ததில், அந்த மையத்துக்கு சொந்தமான இடத்தை மட்டுமே ஈஷா அனுபவம் செய்து வருவதும், ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாதி மத அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கமாட்டேன் : நீதிபதி ஜெயச்சந்திரன்