மு இராமனாதன்
‘இந்தியா, இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளும்’. கடந்த வாரம் (23.10.25) இப்படி அறிவித்தவர் பிரதமர் மோடியோ அதிபர் புடினோ அல்ல. அவ்விதம் அறிவித்தவர் டிரம்ப். இந்தக் கச்சா எண்ணெய் வணிகத்தை டிரம்ப் சொன்னபடி இந்தியா நிறுத்திக்கொள்ளுமா? சமிக்ஞைகள் அப்படித்தான் சொல்கின்றன. இதற்கு முன்பு என்ன நடந்தது? ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவைத் தண்டிப்பேன் என்று எச்சரித்தார் டிரம்ப் (29.7.25).
இந்திய அரசு இணங்கவில்லை. எம் தேச நலனையே முன்னிறுத்துவோம் என்று பதிலளித்தது நமது வெளியுறவு அமைச்சகம் (4.8.25).
விளைவு? டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதித் தீர்வையை இரட்டிப்பாக்கினார் (6.8.25). அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஆகஸ்டில் பணியாத இந்தியா அக்டோபரில் பணியத் தலைப்படுகிறதா? கச்சா எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப்பைச் சமாளிக்கத் திணறுகிறதா இந்தியா? டிரம்ப்பின் சவால்கள் கச்சா எண்ணெயில் தொடங்கவில்லை. அது கச்சா எண்ணெயில் முடியப் போவதுமில்லை.
அடக்கி வாசிப்பதாலோ ஒத்திப் போடுவதாலோ பிரச்சினைகள் தீரப் போவதில்லை. சரி, பிரச்சினை எங்கே தொடங்கியது?
விலங்கு மனத்தால்…

டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்தே (20.1.25) பிரச்சினை தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதம், சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியது டிரம்ப் அரசு. இதற்கு முந்தைய அமெரிக்க அரசுகளும் இதைச் செய்திருக்கின்றன. சில மேலை நாடுகளும் செய்திருக்கின்றன. ஆனால் டிரம்ப் அரசு இவர்களை அனுப்பிய விதம் இதற்கு முன்பு யாரும் செய்திராதது.
40 மணி நேரப் பயணம் நெடுகிலும் இவர்களின் கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டிருந்தன. நாடு அதிர்ச்சியடைந்தது. நாடாளுமன்றம் கொந்தளித்தது. பெண்களும் குழந்தைகளும் விலங்கிடப்படவில்லை என்று நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சமாதானம் சொன்னார். அமெரிக்காவோடு இதைக் குறித்துப் பேசுவோம் என்றும் சொன்னார் (6.2.25). என்ன பேசினார்கள், என்ன பதில் கிடைத்தது என்பன குறித்து பின்னாளில் அவர் தெரிவித்தாரில்லை.
கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி…
சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேற முயற்சித்தவர்களின் நிலை இதுவென்றால், முறையாக அனுமதி பெற்று, பெரும் கட்டணம் செலுத்தி அமெரிக்கப் பல்கலைக்கழங்களுக்குச் சென்ற மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதுகாறும் 6,000 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்கக் குடிவரவுத் துறை ரத்து செய்திருக்கிறது. இதில் சரி பாதிப் பேர் இந்திய மாணவர்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

சாலை விதி மீறல் முதலான குற்றச் செயல்களிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகள் வரை, விசா ரத்துக்காகன காரணங்களாகச் சுட்டப்படுகின்றன. பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான கையெழுத்து இயக்கங்களிலோ பொதுக்கூட்டங்களிலோ பங்கெடுத்தவர்கள் இரண்டாம் வகைக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் ஆவர். ரஞ்சினி சீனிவாசன் என்கிற கொலம்பியாப் பல்கலைக்கழக ஆய்வு மாணவி செய்த குற்றமும் அதுதான். ஆனால் அவரது விசா ரத்து செய்யப்படுவதாக வந்த மின்னஞ்சலில் எந்தக் காரணமும் சுட்டப்படவில்லை (5.3.25).
அவர் தன்னைத்தானே நாடு கடத்திக்கொண்டார். அதன் பிறகு அமெரிக்க அரசு அவரைப் பயங்கரவாதி என்றழைத்தது. அதுதான் விசா ரத்துப் படலத்தின் தொடக்கம். இந்தப் பிரச்சினை பன்மடங்கு பெரிதாகும் என்பதை இந்திய அரசு அப்போது உணர்ந்திருந்ததா என்று தெரியவில்லை. ‘உள்ளூர் சட்டங்களை மதித்து மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என்கிற அறிவுரையோடு அப்போது இந்திய அரசு ஒதுங்கிக்கொண்டது (21.3.25). ஆனால் பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு இது பேசுபொருள் ஆனபோது, இந்தியத் தூதரகங்களில் மாணவர்கள் சட்ட உதவி பெறலாம் என்று சொன்னது (17.4.25).
இப்படி மாணவர்கள் ஒரு புறம் பாதிக்கப்படும் போது, மறுபுறம் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் அமெரிக்காவில் கிடைத்து வந்த வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கிறது. H1B விசாக் கட்டணம் ஒரு இலட்சம் டாலராக உயர்த்தப்பட்டிருப்பதே காரணம் (21.9.25). தவிர, இன்னும் சிலருக்கு நிரந்தர வசிப்புரிமை (பச்சை அட்டை) ரத்தாகியிருக்கிறது.
வரி மேல் வரி

இறக்குமதித் தீர்வை இன்னொரு பிரச்சினை. டிரம்ப் எல்லா நாடுகளுக்கும் சகட்டுமேனிக்குத் தீர்வை விதித்த போது, இந்தியாவிற்கு அவர் விதித்த தீர்வை 26% (2.4.25). பின்னர் அந்தத் தீர்வைகளை இடை நிறுத்தினார். அவ்வமயம் பல நாடுகள் அமெரிக்காவை எதிர்த்துக் குரல் கொடுத்தன, கூடவே பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டன. இந்தியா உட்பட சில நாடுகள் பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தீர்வையைக் குறைத்துவிடலாம் என்று நம்பின.
இரண்டாவது சுற்றில் (29.7.25) பல நாடுகளின் தீர்வை குறைத்தது. ஆனால், நம்பிக்கையோடு காத்திருந்த இந்தியாவின் தீர்வை வெறும் 1% மட்டுமே குறைந்து, 25% ஆகியது. இத்துடன் கச்சா எண்ணெய் அபராதமும் சேர்ந்து, அடுத்த வாரமே அது 50%ஆக உயர்ந்துவிட்டது (4.8.25). அமெரிக்கா விதித்திருக்கும் அதிகபட்சத் தீர்வை இந்தியாவின் மீதுதான்.
தமிழ்நாடு, குஜராத், மராட்டியம், கர்நாடகம், ராஜஸ்தான் முதலிய மாநிலங்களில், அமெரிக்க ஏற்றுமதிக்காகவே தயாராகும் பின்னலாடைகள், கைத்தறித் துணிகள், வேதியல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், தோல் பொருட்கள், ரத்தின-வைரக் கற்கள், தங்க நகைகள், மோட்டார் பாகங்கள் முதலானவற்றின் வணிகம் நிலைகுத்தி நிற்கிறது. நாளது வரை குறிப்பிடத்தக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஏற்றுமதி இழப்பால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2.5% வரை வீழக்கூடும் என்கிறார்கள் பொருளியலாளர்கள்.
மறுக்கா மறுக்கா…
அடுத்து, டிரம்ப்பின் போர் நிறுத்தப் பிரகடனம்

சிந்தூர் நடவடிக்கையைத் (7.5.25) தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. இது அமெரிக்கா மேற்கொண்ட சமரசத்தின் ஊடாக நிறுத்தப்பட்டது என்று அறிவித்தார் டிரம்ப் (10.5.25). அவர் சொன்னபடி போர் நிறுத்தம் நடந்தது. ஆனால், அது அவர் சொன்னதால் நடக்கவில்லை என்று இந்தியா விளக்கமளித்தது. டிரம்ப் அதைக் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. இதுகாறும் ஐம்பது முறைக்கும் அதிகமாகச் சொல்லிவிட்டார்: ‘நான்தான் போரை நிறுத்தினேன்!’. கடைசியாக தென்கொரியாவில் நடக்கும் ஏபெக் மாநாட்டில் இன்னொரு முறை சொன்னார் (29.10.25). இனியும் பல முறை சொல்வார்.
என்ன காரணம்?
டிரம்ப்பின் நடவடிக்கைகள் பல, இந்தியாவின் நலனுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றைக் கணிப்பதிலும் எதிர்கொள்வதிலும் இந்திய அரசின் பக்கம் சுணக்கம் தென்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா தாமதமாக எதிர்வினை ஆற்றுகிறது, அவை மென்மையாக இருக்கின்றன. பிரச்சினைகளும் தீர்ந்தபாடில்லை. இதற்கு இந்தியாவின் அமெரிக்க ஆதரவு மனநிலை ஒரு காரணமாகலாம்.
கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க அரசுகள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் நல்கின. காரணம்: சீனா. அது உலக அளவில், குறிப்பாக ஆசியக் கண்டத்தில் செல்வாக்கு மிக்க சக்தியாக வளர்ந்துவிட்டது. அதற்கு எதிரிடையாக, மக்கள் தொகை மிகுந்த, வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவை முன்னிறுத்தி வந்தது அமெரிக்கா. சீன எதிர்ப்புக்காகவே இந்தியாவை உள்ளடக்கிப் பல கூட்டமைப்புகள் உருவாகின (Quad, IPEF, CISMOA). ஆனால் இப்போது டிரம்ப் அரசின் கண்ணோட்டம் மாறி வருவதாக ஆய்வாளர் சிலர் கருதுகின்றனர்.
சீனா ஆசியாவில் கணிசமான செல்வாக்கை ஈட்டியிருக்கிறது, இதை மட்டுப்படுத்துவது சிரமம், ஆகவே சீனா உலகளவில் ஒரு சக்தியாக வளர்வதைத் தடுத்தால் போதுமானது- அமெரிக்கா இவ்விதம் கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இதன்படி, அமெரிக்காவின் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இனி இந்தியா அவசியமில்லை என்றாகிறது. அமெரிக்காவின் பார்வையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்பதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் சூழலை நேரிடுவது எங்ஙனம்?
என்ன செய்யலாம்?
முதலாவதாக, மாறி வரும் புவிசார் அரசியலை உள்வாங்கிக் கொண்டு இந்தியா காய் நகர்த்த வேண்டும். டிரம்ப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் மீது இடியாக இறங்குவதற்கு அனுமதிக்கலாகாது. முன்னதாகத் திட்டமிட்டு மாற்றுத் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாகத், தீர்வைகள். அமெரிக்கா விதித்திருக்கும் அதீதத் தீர்வுகளைக் குறைப்பதற்கு இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்திய ஏபெக் மாநாட்டிலும் டிரம்ப் இதுகுறித்துப் பேசினார். பேச்சு வார்த்தை நல்லதுதான். அதே நேரம் நமது நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு நேராமலும், தேச நலன்களுக்கு குந்தகம் நேராமலும் பார்த்துக்கொள்வது அவசியம்.
அடுத்ததாக, இந்த உலகம் பெரிது. வேறு சந்தைகளின் வாயில்களைத் தட்டித் திறக்க வேண்டும். சாத்தியமுள்ள நாடுகளோடு தடையற்ற வணிகத்திற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
நான்காவதாக, பன்னாட்டளவில் மதிப்பைப் பெறுவதும் அவசியம். உலக நாடுகள் பலவும் காசா படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது, இந்தியாவின் பல நிலைப்பாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தன; இந்தியா, அமெரிக்கா முகாமிலிருப்பது இதற்கு முக்கியக் காரணம். இதனால் தார்மீக ரீதியாக உலக நாடுகளின் மதிப்பை இழப்பது ஒரு புறம், என்ன செய்தும் அமெரிக்காவின் ஆதரவு கிட்டவில்லை என்பது மறுபுறம்.

கடந்த பத்தாண்டுகளாக நமது நாட்டில் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. இதைக் குறித்துப் பல நாடுகளும் கருத்துச் சொல்வதில்லை, ஆனால் அவை கவனிக்கின்றன. ஒரு கருத்துருவாக்கம் நிகழ்கிறது. பகல்காம் பிரச்சினையின்போது இந்தியாவின் பக்கம் நின்று பாகிஸ்தானைப் பெயர் சொல்லிக் குற்றம் சாட்டிய நாடுகள் இரண்டு மட்டுமே, இஸ்ரேலும் ஆப்கானிஸ்தானும். இவ்விரண்டு நாடுகளுக்கும் உலக அரங்கிலுள்ள மதிப்பு தெரிந்ததுதான்.
கடைசியாக, இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, இந்தியா தன்னளவில் வலுவுள்ள நாடாக வளர வேண்டும். நமது மக்கள் திரளுக்கு நல்ல கல்வியும் தரமான மருத்துவமும் வழங்கி, அவர்களைத் திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். அப்போது இந்தியா ஒரு பெரும் தொழில் மையமாக உருவாகும். ‘ஆத்மநிர்பார் பாரத்’ (சுயச்சார்புள்ள இந்தியா) ஆகவும் மாறும். அதற்கான அனைத்து ஆற்றலும் இந்தியாவிடம் உள்ளது. அது இந்தியர்களின் வாழ்நிலையை உயர்த்தும், பன்னாட்டளவிலும் மதிப்பை ஈட்டித் தரும். இந்தியாவின் சக்தி மிகும். அந்தச் சக்தி டிரம்ப்பின் எல்லாச் சவால்களையும் நேரிடும், இந்தியா வெல்லும்.
கட்டுரையாளர் குறிப்பு

(மு இராமனாதன்– எழுத்தாளர், பொறியாளர். பிரிட்டனின் சார்டட் பொறியாளராகவும் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். பன்னாட்டு அரசியல், பொறியியல், சமூகம், கல்வி, இலக்கியம் சார்ந்து ஏழு நூல்கள் எழுதியுள்ளார்.
தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com)
