அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

Published On:

| By admin

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களுடன் தகவல் பரவியது.

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற பல கிராமங்கள் உள்ளன. இங்கு நேற்று (ஜூன் 28) காலை ஹெலிகாப்டர் வானில் பறப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கேட்டதாகவும் பிறகு திடீரென பெரிய சத்தம் கேட்டு நின்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த சத்தம் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது போல் இருந்ததாகக் கூறி, இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கிருக்கும் வனப்பகுதியில் சல்லடை போட்டு தேடினர். மூன்று மணி நேரத்திற்கு மேல் தேடியும் எதுவும் தென்படவில்லை..

ADVERTISEMENT

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் காவல்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்துக்கான எந்த அடையாளமும் கிடைக்காததால் ஆம்புலன்ஸ்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

இதுபோன்ற சூழலில் சமூக வலைதளங்களில் ஹெலிகாப்டர் விபத்து என புகைப்படங்களுடன் கூடிய தகவல் பரவியது.

ADVERTISEMENT

அதில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் ஃபாரஸ்ட் கார்டுகளில் நீண்ட நேரம், தேடி விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தீவிரம் முதற்கட்ட தகவல்… என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அரியலூரில் விபத்து நடந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லை. அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியும், “குழுமூர் பகுதியில் விமான விபத்து போல சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, எங்கு விபத்து நடந்தது என்ற கேள்வி எழுந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த புகைப்படத்தைக் கூகுளில் தேடியபோது, 2014 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாப்பூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

பரேலியிலிருந்து அலகாபாத் சென்று கொண்டிருக்கும்போது ரேடார் துண்டிக்கப்பட்டு இந்த விபத்து ஏற்பட்டது. இதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்.

இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் அரியலூர் நடந்த விபத்து போன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

எனினும் அந்த சத்தம் கேட்டது உண்மை என்றும், எதனால் அப்படி கேட்டது என ஆய்வு செய்ய வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share