சிவா
நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்திருக்கும் வாகனங்களுக்கான FasTag திட்டம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. FasTag அக்கவுன்ட்டை ரீசார்ஜ் செய்வது முதல் அதிலிருக்கும் பணத்தைக் கையாள்வது வரையிலும் பிரச்சினைதான். முக்கியமாக, FasTag கட்டாயம் என்று சொல்லிவிட்டு டோல்கேட்டில் நிற்கும்போது டெக்னிக்கல் பிராப்ளம் வந்துவிட்டதாகக் கூறி பணம் கேட்பதால் மக்கள் இக்கட்டான நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். FasTag வந்தால் சரியாகிவிடும் என்று சொன்ன பிரச்சினைகளும், FasTag வந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளும், FasTag வைத்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவற்றை இப்போது பார்ப்போம்.
FasTag ரீசார்ஜ் செய்யும் பணம் பாதுகாப்பானதா?
FasTag அறிமுகமான சில நாட்களிலேயே, வீட்டில் நின்றுகொண்டிருந்த காருக்கு 300 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டோல்கேட்டை கடந்து சென்றதாக FasTag அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுத்துவிட்டார்கள் என்று புகார் செய்யப்பட்டது. அப்போதைக்கு, தொழில்நுட்பக் கோளாறு என்று இதை சாதாரணமாகக் கடந்துவிட்டிருந்தாலும், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
டெல்லியில் வசிக்கும் கார் ஓட்டி ஒருவர், தனது FasTag வேலட் வேலை செய்யவில்லை எனப் புகார் கொடுத்திருக்கிறார். சில மணி நேரத்தில் ஆக்சிஸ் பேங்க் கஸ்டமர் கேரில் இருந்து அவருக்கு ஒரு போன் வந்திருக்கிறது. “உங்கள் வேலட் சில காரணங்களால் நீக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நான் அனுப்பும் லிங்க் மூலம் ரிஜிஸ்டர் செய்யுங்கள்” என்று போனில் பேசியவர் கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியே பெயர், முகவரி, கார் நம்பர் மற்றும் அக்கவுன்ட் நம்பர் உட்பட அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்த அந்த நபரிடம், UPI எண்ணைப் பதிவு செய்து அதன்பின் வரும் OTP எண்ணை அனுப்பச் சொல்லியிருக்கின்றனர். அவரும் அப்படியே அந்த நம்பரை அனுப்பிவிட சில நிமிடங்களில் “உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து 50,000 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது” என்ற மெசேஜ் வந்திருக்கிறது.
என்ன ஆனது எனத் தெரியாமல் சில நிமிடங்களில் ஆக்சிஸ் பேங்க் கஸ்டமர் கேருக்கு நேரடியாக அவர் போன் செய்து பேச, “எங்கள் பக்கத்திலிருந்து அப்படி யாரும் போன் செய்யவில்லை. உங்களை யாரோ இதில் ஏமாற்றியிருக்கிறார்கள்” என்று கூறி புகாரை பதிவு செய்து கொண்டிருக்கிறது ஆக்சிஸ் பேங்க். இந்தப் புகாரைப் பொறுத்தவரையில், பணத்தைத் திருடு கொடுத்த நபரின் அக்கவுன்ட்டிலிருந்து எந்த அக்கவுன்ட்டுக்குப் பணம் சென்றிருக்கிறது என்பதை வைத்து, பேங்க் பக்கம் சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும் அல்லது, வேலட் சரியாக வேலை செய்யவில்லை என்று அந்த நபர் புகார் கொடுத்தது ஏமாற்றிய ஆசாமிக்கு எப்படித் தெரியும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினால், ஒருவேளை அந்த வங்கியிலேயே அந்த ஆசாமி பணியாற்றுபவராகக் கூட இருக்கலாம்.
புதிதாக ரீசார்ஜ் செய்யும் பணம் மட்டுமல்ல, FasTag வேலட்டுடன் இணைக்கப்பட்டுள்ள உங்கள் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்துக்குக்கூட பாதுகாப்பு இல்லை. சென்னையிலுள்ள கண்ணன் என்பவர் இரவு உறங்கிக்கொண்டிருந்தபோது “உங்கள் கார் டோல்கேட்டைக் கடந்து சென்றதற்காக வேலட்டிலிருந்து 85 ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது” என்ற மெசேஜ் வந்திருக்கிறது. “இப்போதுதான் காரை வெளியே நிறுத்திவிட்டு வந்து தூங்கினோம். பிறகு எப்படி டோல்கேட்டைக் கடந்திருக்கும்? ஒருவேளை காரை யாராவது திருடிக்கொண்டு சென்றுவிட்டார்களா?” என்ற பதற்றத்துடன் வெளியில் சென்று பார்த்தவருக்கு, கார் வெளியே நிற்பதைப் பார்த்ததில் ஒரே மகிழ்ச்சி. ஆனால், வீட்டில் நின்றுகொண்டிருந்த காருக்கு எங்கேயோ ஒரு டோல்கேட்டைக் கடந்ததாகப் பணம் எடுக்கப்பட்ட மெசேஜில், ‘எந்த டோல்கேட்டை கார் கடந்தது?’, ‘எந்த கார் டோல்கேட்டை கடந்தபோது அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டது?’ என்ற கார் நம்பரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து ஆக்சிஸ் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர் கேட்டபோது “இந்தப் புகாரை FasTag-க்கு அனுப்பி அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்று நாங்கள் உங்களிடம் கொடுப்போம்” என்று கூறியிருக்கின்றனர் பேங்க் தரப்பில் பேசியவர்கள்.
இத்துடன் நிற்காமல், தானாகவே பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து FasTag வேலட்டுக்குப் பணம் டிரான்ஸ்ஃபர் ஆகும் வசதியையும் அவர்களாகவே ஆக்டிவேட் செய்து வைத்திருக்கின்றனர். இதன்மூலம், குறிப்பிட்ட தொகைக்குக் கீழே பணம் குறைந்தால் தானாகவே பேங்க் அக்கவுன்ட்டிலிருந்து FasTag அக்கவுன்ட்டுக்குப் பணம் சென்றுவிடும். அதிக முறை வெளியூர்களுக்குப் பயணம் செய்யாதவர்களுக்கு இப்படி பணப் பரிமாற்றம் நடைபெறுவது தேவையில்லாத ஒன்று. மாத இறுதியில் மினிமம் பேலன்ஸுக்காக வைத்திருக்கும் பணத்தையும் எடுத்துவிட்டால், பேங்குக்கு தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டும். இந்த FasTag வேலட்டுக்குத் தானாகப் பணம் கிரெடிட் ஆகக் கூடாது என்று விரும்பினால், STOP என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, FasTag ரிஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணையும் டைப் செய்து 8828844341 என்ற எண்ணுக்கு மெசேஜ்
காத்திருக்கும் நேரத்தைக் குறைத்ததா FasTag?
FasTag அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய காரணமே, டோல்கேட்டில் வாகனங்கள் நின்று செல்லும் நேரத்தைக் குறைப்பதுதான். டிசம்பர் 15ஆம் தேதி முதல் FasTag திட்டம் நடைமுறைக்கு வந்ததால், இதன் செயல்முறையை ஆராய்வதற்காக Central Toll Plaza Traffic Monitoring System மூலம் 2019 நவம்பர் 15ஆம் தேதி முதல் 2019 டிசம்பர் 14ஆம் தேதி வரையில் டோல் பிளாசாவில் வாகனங்கள் காத்திருக்கவேண்டிய நேரம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டனர். இதில் சராசரியாக ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்வதற்கான காலம் 7 நிமிடம் 44 நொடிகளாக இருந்தது. அதன்பிறகு, 2019 டிசம்பர் 15 முதல் 2020 ஜனவரி 14 வரையில் டோல் பிளாசாவை வாகனங்கள் கடந்து செல்வதற்கு ஆகும் காலத்தைக் கணக்கிட்டபோது, முன்பைவிட 29 சதவிகிதம் அதிக காலம் ஆகிறது என்பது கணக்கிடப்பட்டிருக்கிறது. அதாவது, FasTag எந்த காரணத்துக்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த காரணம் மிகப்பெரிய தோல்வியாக முடிந்தது.
டோல் பிளாசாவுக்குள் நுழையும் ஒரு வாகனம், அதன் இயக்கத்தை நிறுத்துவதற்குள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கேமரா FasTag கார்டை ஸ்கேன் செய்து முடித்து, அந்த FasTag இணைக்கப்பட்டிருக்கும் அக்கவுன்ட்டிலிருந்து பணத்தை எடுத்து கேட்டைத் திறக்க வேண்டும். இதைச் செயல்படுத்தி முடிக்கும் அளவுக்கு இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் FasTag அப்ளிகேஷனுக்குத் திறன் இல்லாததால், டோல் பிளாசாவுக்குள் நுழையும் வாகனங்கள் வந்து நின்ற சில நொடிகளுக்குப் பிறகே கேட் திறக்கிறது. இப்படி வாகனங்கள் இயக்கத்தை நிறுத்தி, திரும்பவும் கிளட்ச் பிடித்து கியரை மாற்றி வண்டியை நகர்த்துவதால் மொத்த இந்தியாவிலும் வருடத்துக்கு 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் அல்லது டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் வீணாகின்றன.
இத்தனை பிரச்சினைகளுடன் ஒரு தேசிய அளவிலான திட்டத்தை அமல்படுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து சில வருடங்கள் கழித்து யாராவது பாராட்டுப் பத்திரம் வாசித்தால், இப்போது நடைபெற்றதையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும்.