சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அல்லு அர்ஜுன் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அல்லு அர்ஜுன் கைதுக்கு பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் கைதாகி விடுதலை செய்யப்பட்டதும் உறவினரான சீரஞ்சிவியை சந்தித்து பேசினார். அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினர் ஆவார். அல்லு – கொனிடாலா குடும்பம் ஆந்திராவில் மிக பாப்புலரானது.
நடிகர்கள் சிரஞ்சீவி, நாகேந்திரபாபு, பவன் கல்யாண் ஆகியோர் கதைஆசிரியர் கொனிடலா வெங்கட் ராவின் மகன்கள். இதில், சிரஞ்சீவி அல்லு அர்ஜுனின் அத்தையான சுரேகாவை திருமணம் செய்துள்ளார். அதாவது அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்தனின் தங்கையை சிரஞ்சீவி மணந்துள்ளார்.
ஆனாலும், சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பகை இருக்கிறது எப்படி தெரியுமா?.
பல ஆண்டு காலமாக பவன் கல்யாண் அல்லு அர்ஜுனுடன் நல்ல தொடர்பில் இல்லை. கடந்த பொது தேர்தலில் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரவிச்சந்திர கிஷோர் ரெட்டியை ஆதரித்து அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்தார்.
பாரதிய ஜனதா கட்சி, ஜனசேனா, தெலுங்கு தேசக்கட்சிக்கு எதிராக அல்லு அர்ஜுன் பிரசாரம் செய்ததில் இருந்தே அல்லு அர்ஜுன் மீது பவன் கல்யாண் காட்டத்தில் இருந்தார்.
அதோடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா முதல்வரும் நல்ல தொடர்பில்தான் உள்ளார். வேறு வேறு கட்சியாக இருந்தாலும் சந்திரபாபு நாயுடு சொல்வதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்பார் என்றும் சொல்கிறார்கள்.
எனவே, தங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுனுக்கு பாடம் புகட்டவே பவன்கல்யாண், சந்திரபாபு ஆகியோர் திட்டமிட்டு இந்த கைது நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்று தெலுங்கு தேசத்தில் பேசிக் கொள்கிறார்கள். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதும் தனது மாமா சிரஞ்சீவியை மனைவியுடன் சென்று சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
இறந்த ரேவதி குடும்பத்தை பார்க்க அல்லு அர்ஜுன் செல்லவில்லை. கோமாவில் இருக்கும் அந்த சிறுவனையும் பார்க்க செல்லவில்லை. நடிகர்களை பொறுத்தவரை சக நடிகர்கள்தான் அவர்களின் குடும்பம் . ரசிகர்கள் அவர்களின் குடும்பம் இல்லை என்பதையே இது காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். எனவே, தெலங்கானா முதல்வரின் நடவடிக்கை சரியானதுதான் என்றும் கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
‘உங்களை மட்டும் அவனால் ஜெயிக்கவே முடியலையே’ – குகேஷின் தந்தை வியந்த வீரர் யார் தெரியுமா?
கோப்பையுடன் சென்னை திரும்பிய உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு!