முதலமைச்சர் ஸ்டாலின் ஜப்பான் பயணத்தில் இருந்தபோது, மே 29 ஆம் தேதி சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற இடங்களில் திடீரென போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி, ஆவடி உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்துகளை விட்டு ஊழியர்கள் இறங்கிவிட்டனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
இந்த திடீர் வேலை நிறுத்தத்தை செய்தது ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் இருந்து இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரைத் தொடர்புகொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார்.

உடனடியாக அமைச்சரும் திமுகவின் தொழிற்சங்க நிர்வாகிகளையும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசினார். இதையடுத்து, சில மணி நேரங்களில் இந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டு மீண்டும் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இனி புதிதாக வேலைக்கு சேர்க்கப்படுபவர்கள் தனியார் பங்களிப்போடு ஒப்பந்த அடிப்படையில்தான் சேர்க்கப்படுவார்கள் என்ற புதிய விதியை எதிர்த்துதான் தொமுசவினர் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். தங்கள் கட்சியே ஆளுங்கட்சியாக இருந்தபோதிலும் அடிமடியில் கை வைக்கும் வேலை என்பதால் தொமுசவினர் எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.
ஏற்கனவே ஏப்ரல் 21 ஆம் தேதி 12 மணி நேர வேலை சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்த்தது. இதுமட்டுமல்ல கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவதை கண்டித்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாளர் அலுவலகத்தை திமுக தொழிற்சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பின்னணியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொமுசவை சேர்ந்த ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தது திமுக தலைமை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சண்முகம் நேற்று (ஜூன் 14) திருச்சியில் தொமுச நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றிருந்தார்.
அப்போது மதியம் அவருக்கு திமுக தலைமையில் இருந்து ஓர் அதிர்ச்சித் தகவல் அனுப்பப்பட்டது. ‘தொமுச பேரவை பொதுச் செயலாளரான தங்களை கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்று கேட்டு அவருக்கு மெமோ அனுப்பப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம்.
ராணுவத்தில் 11 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 1977இல் சென்னை வந்த சண்முகம் அப்போது திமுகவின் தொழிற்சங்க தலைவராக வீரியமாக பணியாற்றிக் கொண்டிருந்த திருவொற்றியூர் நாராயணசாமி, வடசென்னை குப்புசாமி ஆகியோரின் வழிகாட்டுதலில் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டார்.
சண்முகத்தின் துடிப்பான தொழிற்சங்கப் பணிகளை கவனித்து வியந்த கலைஞர் தொமுசவில் பல்வேறு பொறுப்புகளை சண்முகத்துக்கு அளித்தார். தொமுச செயலாளராக 11 ஆண்டுகளும், பொருளாளராக 8 ஆண்டுகளும் பொறுப்பு வகித்தார் சண்முகம். தற்போது தொமுச பொதுச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட நீண்ட அனுபவம் உள்ள திமுகவின் தொழிற்சங்க தலைவரை, எம்பி.யை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யலாமா என்ற ரீதியில் எச்சரித்து மெமோ அனுப்பியிருப்பது தொமுசவுக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியின் கொள்கை முடிவுகளை தொழிலாளர்கள் சார்பில் தொடர்ந்து தொமுச எதிர்த்து வருவதால் இந்த நடவடிக்கை என்கிறார்கள் அறிவாலயத் தரப்பில். தொமுசவினரோ, ‘ஆட்சி நடத்தும்போது கட்சிக்காரங்களை மறந்தால், மறுபடியும் தேர்தல் வரும்போது என்ன செய்வார்கள்?’ என்கிறார்கள்.
வேந்தன்
