சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்திற்கு நடுவே சத்தமே இல்லாமல் நடந்து முடிந்துள்ளது மகளிர் ப்ரீமியர் லீக். Is DC becoming the South Africa of WPL?
மும்பையில் உள்ள பிராபோர்னே மைதானத்தில் நேற்று (மார்ச் 16) இரவு நடந்த இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் மகளிர்.
டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 66 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி 141 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளான கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றியதே மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.
இதன்மூலம் இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை மும்பை முத்தமிட்டது. அதே வேளையில் மகளிர் ப்ரீமியர் லீக்கில் இதுவரை நடந்த 3 இறுதிப்போட்டிக்கும் முன்னேறிய டெல்லி அணி மீண்டும் ஒருமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்து ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து மகளிர் ப்ரீமியர் லீக்கில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை, தென்னாப்பிரிக்கா ஆடவர் அணியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த தொடர் தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் மேக் லானிங் கூறுகையில், ”நாங்கள் இன்னொரு நல்ல சீசனை அனுபவித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. முழு பாராட்டுக்கும் மும்பை தகுதியானது. ஏமாற்றமளிக்கும் விதமாக, பேட்டிங்கில் நாங்கள் சரியாகச் செயல்படவில்லை. 150 ரன்களைத் துரத்துவது என்பது ஒரு நல்ல இலக்காக இருந்தது. ஆனால் ஓரிரு ஓவர்களுக்கு விக்கெட் இழக்காமல் இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் வலுப்படுத்தியிருந்தால் எங்களுக்கு ஒரு வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும்.
எனினும் எங்கள் அணியைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இந்த தொடரில் சில நல்ல தருணங்களைக் கொண்டிருந்தோம். ஆனால் இறுதிப் போட்டியில் எங்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. அது ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்தார்.