விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறும் என்று சொல்லமுடியாது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி, தமிழக அரசியல் தலைவர்களிடம் ’என்.டி.டி.வி தமிழ்நாடு சம்மிட்’ என்ற தலைப்பில் சென்னையில் நேர்காணல் நடத்தியது.
இதில் கலந்துகொண்டு, திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுடன் சற்று நெருக்கம் காட்டுவது போலவும், அது திமுக உடனான உறவில் ஒரு அழுத்தம் ஏற்பட்டுள்ளது போலவும் தெரிகிறதே, இதை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் காங்கிரஸை ஒரு தனிநபராகப் பார்க்கவில்லை. நான் காங்கிரஸை ஒரு முழுமையான கட்சியாகப் பார்க்கிறேன். ஒரு தனிநபர் வேறொரு கட்சியில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கிறார் என்பதற்காக, காங்கிரஸ் அவர்களுடன் பேசுகிறது என்று அர்த்தமல்ல. ஏனெனில் அந்த ஒரு நபர் மட்டுமே கட்சி ஆகிவிட முடியாது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் புதியதாக அரசியலுக்கு வருகிறார்கள். எம்.ஜி.ஆருக்குப் பிறகு எத்தனையோ பேர் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் வந்தார்கள், இருந்தார்கள், போனார்கள். இதைப் பற்றி சொல்வதற்கு என்னிடம் வேறொன்றும் இல்லை.”
உங்கள் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் விஜய் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் ஒரு புதிய அரசியல் வரவை அலட்சியப்படுத்த முடியாது . விஜய், அவரது மாநாடுகள் மற்றும் அவரது மக்கள் செல்வாக்கு குறித்து உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
“இது ஒரு ஜனநாயக நாடு, இங்கே யாருக்கும் உரிமை இருக்கிறது. அருண்மொழி (அருகில் இருப்பவர்) அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் விலகி இருக்கிறார். யார் அரசியலுக்கு வர வேண்டும், வரக்கூடாது என்று நாம் சொல்ல முடியாது.
ஆனால் விஜய் குறித்தோ, தவெக குறித்தோ நான் கருத்துச் சொல்ல வேண்டுமானால், அவர்கள் எதற்காக நிற்கிறார்கள் என்பதை நான் இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக நிற்கிறோம் என்று அவர்கள் சொல்லாத வரை, சில பிரச்சனைகள் குறித்துப் பேசாத வரை என்னால் எதுவும் சொல்ல முடியாது.
ஏனெனில் கூட்டங்கள் வருவதை நான் பார்த்திருக்கிறேன். பல அரசியல் தலைவர்களுக்குக் கூட்டம் வரும், இசைக்கலைஞர்களுக்கும், திரை நட்சத்திரங்களுக்கும் கூட்டம் வரும்.
ஆனால் அது அப்படியே வாக்குகளாகவோ அல்லது தேர்தல் முடிவுகளாகவோ மாறும் என்று சொல்ல முடியாது. நான் அவரைத் தாழ்த்திப் பேசவில்லை. ஆனால் அவர்களின் கொள்கை என்ன, எதை அவர்கள் நம்புகிறார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.
உதாரணமாக, ‘பெரியார் தான் என் கொள்கைத் தலைவர், ஆனால் நான் அவரது கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்கவில்லை’ என்று சொன்னால், அந்த முதல் வரியிலேயே அவர் மீது எனக்குச் சந்தேகம் வருகிறது.
விஜய் எதற்கும் நிலையான கொள்கை கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் நீங்கள் இவ்வளவு நாசூக்காகச் சொல்கிறீர்களா?
இல்லை, நான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன், அவ்வளவுதான்.
இவ்வாறு பதிலளித்தார்.
