பொதுவாக காலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. தூங்கி எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்கும்போது புத்துணர்வு கிடைப்பதோடு, உளவியல் ரீதியாக விழிப்பான நிலையையும் (Alertness) ஏற்படுத்தும்.
குளிர்ந்த நீர் குளியல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மனநிலையையும் புத்துணர்வாக்கும்.
அடிபட்டு உடலில் எங்காவது வீக்கம், வலி இருந்தால் அதைக் குறைக்க உதவும். குளிர்ந்த நீரில் குளிக்கும்போது சருமம் இறுக்கமாகும் என்பதால் சுருக்கங்கள் விழாமல் தடுக்கும்.
பொதுவாக, குளிர் நேரங்களில் உடலில் இருக்கும் வெப்பத்தைத் தக்க வைப்பதற்காக ரத்தக்குழாய்கள் சற்று இறுக்கமாகும். இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏதேனும் ரத்தக்குழாயில் 70, 80 சதவிகிதம் இருக்கும் அடைப்பு 100 சதவிகிதமாக மாற வாய்ப்புள்ளது.
இதனால்தான் குளிர்காலங்களில் பொதுவாகவே மாரடைப்பு அதிகமாக நிகழும். இதுபோன்ற நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தக்குழாய்கள் மேலும் இறுக்கமாக வாய்ப்புள்ளது. எனவே, இதய நோயாளிகள் குளிர்ந்த நீர் குளியலைத் தவிர்ப்பது நல்லது.
அதே போல நுரையீரல் தொடர்பான ஆஸ்துமா, சிஓபிடி எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள், வறண்ட சருமத்தால் ஏற்படும் அரிப்பு, ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களும் குளிர்நீரில் குளிப்பதைத் தவிர்க்கலாம். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது.
வெந்நீரில் குளிப்பதால் ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால்தான் குளித்த பிறகு சிறிது நேரம் வியர்க்கும்.
தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீரில் குளிக்கும்போது அந்த இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து பிரச்சினையைச் சீராக்கும். இதய நோயாளிகளுக்கும் வெந்நீர் குளியல் நல்லது.
சருமத்தில் உள்ள நுண்துளைகள் விரிவடைவதால் அழுக்குகள் வெளியேறும். சருமத்தில் காணப்படும் தொற்றுகளை மட்டுப்படுத்தும். வியர்வை சுரப்பியில் அடைப்பு ஏற்படுவதால் உருவாகும் கரும்புள்ளிகள் (Blackheads) உருவாகாமல் தடுக்கும்.
மிக முக்கியமாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனநிலையை இலகுவாக்கும்.
வெந்நீரில் குளிக்கும்போது கலோரி அதிகமாக எரிக்க உதவும். மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படாது. இரவு நேரங்களில் வெந்நீரில் குளிக்கும்போது மன அழுத்தம் குறைந்து, ஆழ்ந்த உறக்கம் வரும்.
ஆவி பறக்க கொதிக்கும் நீரில் குளிக்கக் கூடாது. அதிக வெப்பமான நீரில் குளிக்கும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் ஆக்டிவேட் ஆகத் தொடங்கும்.
இதனால் மனப்பதற்றம், மன அழுத்தம் அதிகரிக்கலாம். மேலும், சருமம் பொசுங்குவது (Skin Burns) போல ஆகிவிடும். உடல் வலியை அதிகரிக்கவும் செய்யும். வெதுவெதுப்பான, கை பொறுக்கும் சூட்டில் உள்ள நீரில் குளித்தால் போதுமானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு
ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!
விடிய விடிய குடி காலையில் பலி… 60 வயதுக்காரருடன் தங்கிய 27 வயது இளம் பெண் இறந்த பின்னணி!
