கடந்த 2 நாட்களில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளதால் கொலை நகரமாகிறதா சென்னை என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இன்று (ஜூன் 13) கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கறிஞர் கவுதம் கொலை
சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம். 29 வயதான இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
இவர் ஜூன் 11ஆம் தேதி காலையில் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். திருவான்மியூர் ஜெயந்தி சிக்னல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வழக்கறிஞர் கவுதம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் அவரை சுற்றி வளைத்தனர். அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து கவுதமை வெட்டினர். இதனால், காயமடைந்த கவுதம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். இதில், வழக்கறிஞர் கவுதமின் நண்பர் உட்பட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கண்ணகி நகரைச் சேர்ந்த கமலேஷ் (27), அவருடைய நண்பர்கள் கொட்டிவாக்கம் நித்யானந்தம் (27), பெரும்பாக்கம் பார்த்திபன் (31) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் கமலேஷ் போலீஸ் விசாரணையில், “நானும், கவுதமும் நண்பர்கள் தான். முதலில் கொட்டிவாக்கத்தில் ஒன்றாக வசித்து வந்தோம். பின்னர் கவுதம் திருவான்மியூர் சென்றுவிட்டார். குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களிடம் பழக ஆரம்பித்தார்.
பாலவாக்கத்தைச் சேர்ந்த மதன்குமார் எனது உறவினர் ஒருவரை மதுபோதையில் தாக்கினார். இதை நான் தட்டிக்கேட்டேன்.
ஆனால் கவுதம் மதன்குமாருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் ஆத்திரத்தில் கவுதமை கொலை செய்ய திட்டமிட்டு நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு தப்பித்துவிட்டோம்” என்று வாக்குமூலமாக கூறியிருக்கிறார்.
வழக்கறிஞர்கள் போராட்டம்
இந்நிலையில் வழக்கறிஞர் கவுதம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் இன்று (ஜூன் 13) ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத் தலைவர் அறிவழகன் தலைமையில் வழக்கறிஞர்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கறிஞர் கவுதம் கொலையின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, காவல்துறையினர் உண்மையான குற்றவாளியை கைது செய்யவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றவும் கோரி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பாரிமுனையில் இருந்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கூலித் தொழிலாளி வெட்டி கொலை
கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா. கூலித் தொழிலாளியான இவர், நேற்று (ஜூன் 12) பணி முடித்துவிட்டு, இரவு 9 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தர்மாவிடம் ‘உனது அண்ணன் சூர்யா எங்கே’ எனக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அதற்கு தர்மா பதிலளிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தி, பீர் பாட்டில் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், தடுக்கச் சென்ற தர்மாவின் நண்பன் கிஷோரையும் அந்த கும்பல் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் தர்மாவுக்கு வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை மீட்ட அவரது நண்பர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தர்மா, நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆர்.கே. நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரவுடி வெட்டி கொலை
திருவொற்றியூர் அஞ்சுகம் நகரை சேர்ந்த ராசையா. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருவொற்றியூர் பகுதிகளில் முரளி என்பவர் கஞ்சா விற்று வந்துள்ளார். ராசையாவும் கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பகுதியில் கஞ்சா விற்க வேண்டும் என்றால், மாமூல் தர வேண்டுமென முரளியை, ராசையா தாக்கி மிரட்டியுள்ளார்.
இந்தசூழலில் கடந்த ஜூன் 10ஆம் தேதி நள்ளிரவில் திருவொற்றியூர் அஜாக்ஸ் புதிய பேருந்து நிலையம் அருகில், ராசையா தன் நண்பர் நிர்மல்குமாருடன் மது அருந்தி உள்ளார்.
அப்போது முரளி தன் கூட்டாளிகள் மூவருடன் வந்து, ராசையாவை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த ராசையாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் அங்கிருந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே ராசையா உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான முரளி உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.
கொலை நகரமாகிறதா சென்னை?
இதேபோல், சென்னையில் கடந்த 2 நாட்களில் 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று எக்ஸ் வலைதள பக்கத்தில் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் திருவான்மியூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளன.
கொலையான மற்றும் கொலை செய்த கும்பல்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும், அற்ப காரணங்களுக்காக நடைபெற்ற இந்த கொலைகள் சென்னை நகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை படம் பிடித்து காட்டுகிறது.
பெருகி வரும் மது மற்றும் போதை பொருட்களின் ஆதிக்கத்தின் தாக்கமே இந்த படுகொலைகளுக்கு காரணம். இந்நிலை நீடித்தால் மக்கள் சுதந்திரமாக நடமாட அச்சப்படும் சூழ்நிலை உருவாகும். சமுதாய சீர்கேட்டை உணராத தமிழக அரசு நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.
இப்படி அடுத்தடுத்து கொலைகள் நடப்பது சென்னைவாசிகளை அச்சமடைய வைத்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market : உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை!
காஷ்மீரில் 4 நாட்களில் 4 தீவிரவாத தாக்குதல்… மோடி மவுனம் சாதிப்பது ஏன்? ராகுல் கேள்வி!