விஜய்யுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? சீமான் பதில்!

Published On:

| By Minnambalam Desk

தவெக – நாம் தமிழர் கூட்டணி சரியாக வராது என்று மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். is chance of an alliance with Vijay

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அவ்வப்போது விலகி வரும் நிலையில் இன்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கோ.தமிழரசன் விலகுவதாக அறிவித்தார். தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக சீமான் செயல்படுவதாகவும், பிற கட்சித் தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் தமிழரசன். சாதிப் பெருமை பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர். கட்சியிலிருந்து பிரிந்து செல்பவர்களை பற்றி கவலைப்பட போவதில்லை, பெரியாரை ஏற்றுக் கொள்பவர்கள் கட்சியில் இருந்தால் அவர்களும் விலகிக் கொள்ளலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் புறக்கணித்த நிலையில் திமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.  டெபாசிட் பெறவில்லை என்றாலும் தொடர்ந்து களத்தில் நிற்பதால் வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருகிறது.

கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகினாலும் கட்சியை வலுப்படுத்தும் வேலையில் சீமான் இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் இன்று (பிப்ரவரி 19) நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும். சீமானுக்குப் பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து செல்கின்றனர். நேர்மையாக கட்சி நடத்த சர்வாதிகாரியாக செயல்படுவேன். நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை. தமிழ் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்” என்று கூறினார்.

தவெக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், “திராவிடம் பேசாமல், பெரியாரை பேசாமல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. எனவே, தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது,” என்று  கூறினார். is chance of an alliance with Vijay

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share