”அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா?” என்று பாஜகவை நோக்கி ராகுல் காந்தி இன்று (டிசம்பர் 14) கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நேற்றும் இன்றும் அரசியலமைப்பு தின விவாதம் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடத்தப்பட்டு வருகிறது.
வயநாடு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா காந்தி மக்களவையில் முதன் முறையாக நேற்று பேசியிருந்தார். இன்று அவரது சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஒரு கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தையும், மறு கையில் மனு ஸ்மிருதி புத்தகத்தையும் வைத்து கொண்டு பேசினார்.
அரசியலமைப்பு குறித்து சாவர்க்கர் கூறியது இதுதான்!
அவர், “அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்பது பற்றியும் ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்கிய தலைவர் சாவர்க்கர் கூறியிருப்பதை நான் இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் இங்கு ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆதாரமாக ஆர்எஸ்எஸ் தான் இருக்கிறது.
‘அரசியலமைப்பு பற்றி கூற வேண்டும் எனில் அதில் எதுவும் கிடையாது. நமது இந்து தேசத்தில் வேதங்களுக்கு பிறகு மிகவும் மதிப்பு மிக்கதாக இருப்பது மனுஸ்மிருதி தான். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறையை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது. மனுஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருக்கிறது’ என்றுதான் சாவர்க்கர் கூறியுள்ளார்.
சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா?
அவரது எழுத்துக்களில் அரசியலமைப்பு சட்டம் குறித்து எதுவும் இல்லை. அதாவது அரசியலமைப்பு சட்ட புத்தகம், மனுஸ்மிருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடக்கும் போராட்டமும் இந்த இரண்டு புத்தகங்களுக்கு இடையில்தான்.
இப்போது கேள்வி என்னவென்றால் ஆளும் கட்சியாக இருக்கும் நீங்கள் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படியென்றால் நீங்கள் உங்கள் தலைவர் சாவர்க்கரை கேலி செய்கிறீர்களா? அவருடைய எழுத்தை அவமானப்படுத்துகிறீர்களா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது!
தொடர்ந்து அவர், “நாட்டின் அரசியலமைப்பை ஒன்றாக பாதுகாப்பது தான் இந்தியக் கூட்டணியின் சித்தாந்தம். அரசியலமைப்பின் பாதுகாவலர்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் மனுஸ்மிருதியின் ஆதரவாளர்கள். மனுஸ்மிருதியால் அல்ல, அரசியல் சாசனத்தால் நாடு நடத்தப்பட வேண்டும்.
சமூக, பொருளாதார சமத்துவம் இல்லாவிட்டால் அரசியல் சமத்துவம் அழிந்து விடும் என்று அம்பேத்கர் கூறினார். இன்று அது நிரூபணமாகியுள்ளது.
நாட்டில் அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இனி சமூக சமத்துவமும் இல்லை, பொருளாதார சமத்துவமும் இல்லை.
வெட்டப்பட்ட கட்டைவிரலை காட்ட விரும்புகிறோம்!
இந்தியாவில் ஒரு போர் நடக்கிறது என கூறிய ராகுல், துரோணாச்சாரியாருக்கு காணிக்கையாக தனது கட்டை விரலை தியாகம் செய்த ‘ஏகலைவா’ கதையை கூறினார்.
தாராவியை அதானிக்கு கொடுக்கும்போது, அங்குள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள், டெல்லிக்கு வெளியே நியாயமான விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களின் கட்டை விரலை வெட்டுகிறீர்கள்.
அதனால்தான், நாங்கள் அடுத்த கட்டமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோருகிறோம். நீங்கள் யாருடைய கட்டைவிரலை வெட்டினீர்கள் என்பதை நாட்டுக்கு காட்ட விரும்புகிறோம். தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்கள் என கட்டைவிரல்கள் வெட்டப்பட்டவர்களைக் காட்ட விரும்புகிறோம்.
“50% இடஒதுக்கீடு என்ற சுவரை உடைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இந்தியாவில் புதிய வளர்ச்சி ஏற்படும்” என்று ராகுல் காந்தி பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?