கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பான கேள்விக்குச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
அதிமுக இரு அணியாகப் பிளவுபட்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அணியும், இந்தப் பொதுக்குழு அறிவிக்கப்பட்டதே செல்லாது என்று
ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (ஜூன் 28) எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழுவை நடத்துவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கு அல்லது ஏற்கனவே பொதுக்குழு நடத்தப்பட்ட வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபம் ஆகிய ஏதேனும் ஒரு இடத்தில் நடத்துவதற்கு ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியத்திடம், கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்குத் தமிழக அரசு சார்பில் எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் எங்கே யார் கூடினாலும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது மற்றும் முக கவசம் அணிவது போன்ற கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
**-பிரியா**
