மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு கதை நாயகனாக நடித்த படம் ‘மண்டேலா’. ஊர் தலைவரின் உடல்நலம் கவலைக்கிடமாக, யாரை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்று அவரது இரு தாரங்களின் மகன்களும் நேருக்கு நேர் மோதுவதால் உருவாகும் விளைவுகளைச் சொன்னது அப்படம். அதில் அவர்களது மோதல்களுக்கு நடுவே மாட்டிக்கொள்கிற அப்பாவியாகத் தோன்றியிருந்தார் யோகிபாபு.
அந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, இயக்குனருக்கும் சிறப்பானதொரு புகழைத் தேடித் தந்தது.
கிட்டத்தட்ட அந்த ‘ட்ராக்’கில் பயணிக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பாம்’ திரைப்படம். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ தந்த விஷால் வெங்கட் இதனை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
இதில், பேச்சு மூச்சற்றுக் கிடக்கும் காளி வெங்கட் பாத்திரத்தால் ஒரு கிராமமே பீதியில் ஆழ்வதாகக் காட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அவ்வூரில் நிலவுகிற சாதி மோதலை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்தித் தருவதாக அந்த சம்பவம் மாறுவதைச் சொல்கிறது ‘பாம்’ ட்ரெய்லர்.
விலாவாரியாகக் கதை சொல்வது போன்று ட்ரெய்லர் அமைந்தாலும், அதையும் தாண்டி படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற நம்பிக்கை உருவாகிறது. அதுவே இப்படத்தின் ப்ளஸ்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். அது எந்தளவுக்கு ப்ளஸ் என்பது இந்த ட்ரெய்லரை இரண்டாம் முறை பார்க்கும்போதே புரிந்துவிடும்.
’அதிகப்படியான டயலாக்குகள் வழியே கதை சொல்வதாக இப்படம் அமைந்தாலும் பரவாயில்லை’ என்று ரசிகர்கள் கருதுகிற வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. அதனைவிடப் பல படிகள் தாண்டுகிற வகையில் படம் அமைந்தால் போதும்; அர்ஜுன் தாஸை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக , ’பாம்’ மாறிவிடும்..!
