நீதிமன்றத்தை விட ஐஏஎஸ் அதிகாரி மேலானவரா? சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Published On:

| By Mathi

Chennai Madras High Court

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நாளை ஜூலை 10-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. Madras High Court Chennai Corporation Commissioner

சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலமான ராயபுரம் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் கவுன்சிலரும் வழக்கறிஞருமான ருக்மாங்கதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2021-ல் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவில்லை என வழக்கறிஞர் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இதனை ஜூலை 8-ந் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஶ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதத் தொகையை தமது ஊதியத்தில் இருந்து அடையாறு புற்று நோய் மருத்துவமனை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர், அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க கோரி கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன், தலைமை நீதிபதி ஶ்ரீராம் அமர்வில் இன்று ஜூலை 9-ந் தேதி முறையிட்டார்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஶ்ரீராம், வழக்கறிஞர்கள் தவறான பிரமாணப் பத்திரத்தைக் கொடுத்திருந்தாலும் கூட, சென்னை மாநகராட்சி ஆணையர் படித்து பார்த்துதான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை எனில் மாநகராட்சியின் ஆணையராக இருக்கவே அவர் தகுதி இல்லாதவர்; ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என நினைக்கிறாரா? நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் காட்டவா? என்றும் காட்டமாக சாடினார்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி ஶ்ரீராம், உரிய பிரமாணப் பத்திரத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் நாளை ஜூலை 10-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை ஜூலை 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் அபராதம் குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தலைமை நீதிபதி ஶ்ரீராம் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share