தமிழ்நாடு முழுவதும் ஜல்லி கற்கள், எம் சாண்ட் போன்ற பொருட்களுக்கான இ பாஸ் வழங்குவதை கனிம வளத்துறை காரணமின்றி நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் சர்வர் பிரச்சனையே இதற்கு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நவீன தமிழக வளர்ச்சியில் கட்டுமானத்துறை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்பை தருவது கட்டுமானத்துறை.
ஆனால் நாட்டில் கட்டுமானத் துறை இன்று வரலாறு காணாத பல நெருக்கடியை சந்தித்து நிற்கிறது. சிமெண்ட், இரும்புக் கம்பி விலை உச்சம், தொழிலாளர் பற்றாக்குறை, மழையால் பணிகள் தாமதம், வங்கிக் கடன் வட்டி உயர்வு என ஏற்கனவே பல சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்த துறையில் மணல் தட்டுப்பாடு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து ஆற்று மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமானத்திற்கு எம் சாண்ட் மணல் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
அதேசமயம் தமிழகத்தை பொறுத்தமட்டில் சுமார் 3,000 இடங்களில் தனியார் கருங்கல் குவாரிகள் செயல்படுகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கருங்கற்கள், கிரஷர்கள் எனப்படும் கல்லுடைப்பு ஆலைகள் வாயிலாக உடைத்து, ஜல்லிகளாக மாற்றப்படுகின்றன. அதேசமயம் கருங்கல் வெட்டி எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த, கனிம வளத்துறை சார்பில் நடைச்சீட்டு (பாஸ்) வழங்கப்பட்டு வந்தது.
அதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தற்போது இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் ஜல்லி கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் போன்ற பொருட்களுக்கான இ பாஸ் வழங்குவதை கனிம வளத்துறை காரணமின்றி நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் குவாரி உரிமையாளர்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து தமிழ்நாடு ஸ்டோன் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சின்னசாமியிடம் நாம் பேசுகையில், “முன்னறிவிப்பின்றி இ பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையால் மட்டுமே கடந்த 2 நாட்களாக இ பாஸ் வழங்கவில்லை. இன்று காலை முதல் மீண்டும் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.
