“தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பதன் மூலம் பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்டா விவசாயிகளின் பாசன வசதிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) தண்ணீரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “காவிரி தண்ணீர் மற்றும் இடுபொருட்களை திறம்பட பயன்படுத்தி நெல் உற்பத்தியை இந்தாண்டும் உயர்த்தும் நோக்கில் விவசாயிகள் செயல்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் அமித் ஷாவின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அவர், “மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்த திட்டங்கள் என்ன என்பது குறித்து நான் கேட்ட கேள்விக்கு அமித்ஷா இதுவரை பதில் தரவில்லை.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுக்கு தேவைப்படவில்லை.
அதேவேளையில், சென்னை மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேது சமுத்திர திட்டம், சேலம் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம் – மதுரைவாயல் பறக்கும் சாலை, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது தான்.
இந்நிலையில் எய்ம்ஸ் குறித்து திமுக பதில் கூற வேண்டும் என்று சொல்வது அமித்ஷா வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.
தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்கிற அமித்ஷாவின் கருத்து மகிழ்ச்சிதான். அப்படி பார்த்தால் தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளது.
தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும்.
அதேநேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பதன் மூலம் பிரதமர் மோடி மீது அமித்ஷாவிற்கு என்ன கோபம் என தெரியவில்லை”என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
